லிபியாவில் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் தீவிரவாதிகளின் தாக்குதல் எதிரொலி காரணமாக, குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சர்வாதிகாரியான கடாஃபியின் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு அங்கு நடைபெற்ற 2ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
தேர்தலை சீர்குலைக்கும் விதமாக கடாஃபியின் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
"தலைநகர் பெங்காஸியில் வாக்குப்பதிவின் போது இஸ்லாமிய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 53 பேர் காயமடைந்தனர்.
இதன்பின்னர் வழக்குரைஞரும், மனித உரிமை ஆர்வலருமான சால்வா புகைகீஸ் அவரது வீட்டில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்' என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் மேற்குப்பகுதியிலுள்ள அல்-ஜெமீல் நகரில் வாக்குச்சாவடிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த 5 பேரை சுட்டுக்கொன்றதுடன், வாக்கு எந்திரங்களை தூக்கிச் சென்றதை அடுத்து, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 18 வாக்குச்சாவடிகளை மூடுமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
லிபியாவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 15 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் அங்கு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் 6.30 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால் வாக்குப்பதிவு 47 சதவீதமாக குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.