விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை: இந்தியா- வங்கதேசம் முடிவு

சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், வங்கதேசமும் முடிவு செய்துள்ளன.
விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை: இந்தியா- வங்கதேசம் முடிவு
Published on
Updated on
1 min read

சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இந்தியாவும், வங்கதேசமும் முடிவு செய்துள்ளன.

டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி ஆகியோருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ண பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் வங்கதேசத்துக்கு புதன்கிழமை இரவு வந்தார். தனது பயணத்தின் முதல் கட்டமாக டாக்காவில் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசனை வியாழக்கிழமை அவர் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சுஷ்மா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவுத்துறை அமைச்சர் அபுல் ஹசன் ஆகியோருடனான சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பின்போது, இருநாடுகளிலும் 13 வயதுக்கு உள்பட்ட சிறார்கள், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பது, திரிபுரா மாநிலம் பலாடானாவில் எரிவாயு மூலம் செயல்படும் மின்நிலையத்தை இருநாடுகளும் சேர்ந்து அமைப்பது, அந்த மின்நிலையத்தில் இருந்து வங்கதேசத்துக்கு மின்சாரம் அளிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நில எல்லை ஒப்பந்தம், தீஸ்தா ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தம், சட்ட விரோத குடியேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

குற்றவாளிகளை நாடு கடத்துதல்: வங்கதேச வெளியுறவு துறை அமைச்சருடனான சுஷ்மா ஸ்வராஜின் சந்திப்பின்போது, இருநாடுகளும் குற்றவாளிகள் மற்றும் சிறைக்கைதிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் மற்றும் மூத்த வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com