ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராவதற்கு இந்தியா மீண்டும் போட்டியிடுகிறது.
இதுகுறித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இந்தியா உள்பட 47 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியாவின் உறுப்பினர் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், 2015-17ஆம் ஆண்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராவதற்கு இந்தியா மீண்டும் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலில் ஆசிய நாடுகளில் வங்கதேசம், கத்தார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் போட்டியிடுகின்றன. இதில், தேர்வு செய்யப்படவுள்ள 4 நாடுகளில் இந்தியாவும் வெற்றிபெறும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.