நட்பு நாடுகளுடன் இணைந்து சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது அமெரிக்கா தொடங்கியுள்ள தாக்குதல் குறித்து தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் மேவில் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார். அவர் கூறியது: பஹ்ரைன், ஜோர்டான், சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் படைகளுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் சிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள், "டாமஹாக்' ரக ஏவுகணைகள் ஆகியவை இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.
ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது குறித்த முழு விவரங்களை உடனடியாகத் தர இயலாது.
சிரியாவில் தாக்குதல் தொடுப்பதற்கான முடிவு, அதிபர் ஒபாமா அளித்த அதிகாரத்தின் கீழ், கூட்டுப் படைகளின் தளபதியால் திங்கள்கிழமை அதிகாலை எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
செங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்
கப்பல்களிலிருந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தரை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் 47 "டாமஹாக்' ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவர்தெரிவித்தார்.
பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., சிரியாவில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியதுடன், அண்டை நாடான இராக்கிலும் கடந்த ஜூன் மாதம் ஏராளமான இடங்களைக் கைப்பற்றி உலக நாடுகளைத் திகைக்க வைத்தது.
இராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரங்களான மொசூலையும், திக்ரித்தையும் அந்த அமைப்பு கைப்பற்றியதுடன், தலைநகர் பாக்தாதுக்கு 50 கி.மீ. வரை முன்னேறிச் சென்றது.
அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, இராக்கிலுள்ள ஐ.எஸ். இலக்குகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் 8-ஆம் தேதி வான்வழித் தாக்குலைத் தொடங்கியது.
அதற்குப் பதிலடியாக, தங்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க செய்தியாளர்கள் இருவரையும், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரையும் கொடூரமான முறையில் தலையைத் துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், தங்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் படுகொலைகள் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருப்பதாகவும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான செயல்திட்டத்தை அதிபர் ஒபாமா இம்மாதம் 10-ஆம் தேதி வெளியிட்டார்.
அப்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்படுவார்கள் எனவும், தேவைப்பட்டால் சிரியாவிலும் அவர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது: சிரியா
டமாஸ்கஸ், செப். 23: சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்போவது குறித்து அமெரிக்கா தங்களிடம் ஏற்கெனவே தகவல் தெரிவித்ததாக சிரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறுத்து அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ""ராக்கா மாகாணத்திலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படும் என ஐ.நா.விலுள்ள சிரியா பிரதிநிதிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் அளித்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
ஐ.எஸ். ஆதிக்கம் நிறைந்த பகுதியான ராக்கா, அந்த அமைப்பின் முக்கிய ராணுவ மையமாகத் திகழ்ந்து வருகிறது.
எனினும், அந்தப் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்துவதாக வெளியாகும் தகவல்களை பென்டகன் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.