சுடச்சுட

  

  நைஜீரியாவின் கானோ நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச்செயலர் பான் கி-மூன், போப்பாண்டவர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நைஜீரியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. அனைத்து விதமான ஆதரவையும் உதவியையும் அளிக்கும் என்றும் கூறினார்.

  இந்த சம்பவம் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து தெரிவிக்கையில், மசூதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, கடவுளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாவச் செயலாகும் என்றார்.

  இதனிடையே, மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மசூதிக்குள் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் தொழுகை தொடங்கிய பிறகு, அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

  இதில் ஏராளமானோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மசூதியைவிட்டு வெளியேற முயன்றவர்களை நோக்கி, வெளியே இருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.

  பின்னர், தீவிரவாதிகளைச் சூழ்ந்த பொதுமக்கள், அவர்களைத் தாக்கினர். இதில் தீவிரவாதிகள் நால்வர் உயிரிழந்தனர்.

  குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. 270 பேர் காயமடைந்தனர்.

  இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகரின் சில இடங்களில் காவல் துறையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் போகோ ஹராம் அமைப்பு இருந்ததாகக் கருதப்படுகிறது.

  கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நைஜீரியாவில் இஸ்லாமிய தேசத்தை போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு நிறுவ முயன்று வருகிறது. போகோ ஹராம் அமைப்பினருக்கு எதிராக, நைஜீரிய மக்கள் ஆயுதமேந்த வேண்டும் என்று கானோவின் தலைமை மதகுரு, இதே மசூதியில் கடந்த வாரம் நிகழ்த்திய உரையில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அங்கு வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

  வட கிழக்குப் பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மசூதி மீது போகோ ஹராம் நடத்தத் திட்டமிட்ட தாக்குதலை காவல் துறையினர் முறியடித்தனர்.

  சில நாட்களுக்கு முன்னர், இந்நகரில் இரு பெண்கள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத் தக்கது.

  தீவிரவாத வன்முறைக்கு இந்த ஆண்டு இதுவரை ஏறத்தாழ 2,000 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாக, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai