சுடச்சுட

    

    கருப்பினத்தவர் மரணம்: மேலும் ஒரு தீர்ப்பால் அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்

    Published on : 05th December 2014 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    york

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரது மரணத்துக்குக் காரணமான காவலர் மீது குற்ற விசாரணை தேவையில்லை என பெருநடுவர் குழு புதன்கிழமை அளித்த தீர்ப்பையடுத்து, அந்த நகரில் போராட்டம் வெடித்துள்ளது.

    நியூயார்க் நகரில், தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக கருப்பினத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் (43) என்பவரை போலீஸார் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி கைது செய்ய முயன்றனர்.

    அப்போது டேனியல் பன்டாலியோ என்ற காவலர் அவரது கழுத்தை நெருக்கிப் பிடித்துக் கொண்டார்.

    இதனால் மூச்சுத் திணறி எரிக் கார்னர் மரணமடைந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொண்ட பெருநடுவர் குழு, டேனியல் பன்டாலியோ மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை தேவையில்லை என புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    அந்த நாட்டின் ஃபெர்குஸன் நகரில், மைக்கேல் பிரெளன் (18) என்ற கருப்பின இளைஞரை கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொன்ற காவலர் மீது விசாரணை தேவையில்லை என்ற பெருநடுவர் குழுவின் தீர்ப்பால் அண்மையில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற மற்றொரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே ஃபெர்குஸன் பெருநடுவர் குழுவின் தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து வரும் கருப்பின அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் நியூயார்க் பெருநடுவர் குழு புதன்கிழமை அளித்த தீர்ப்பால் மேலும் கொதித்துப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தீர்ப்பின் விவரம் வெளியான உடனேயே, நியூயார்க்கின் ராக்ஃபெல்லர் மையத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    அந்த நகரின் "டைம்ஸ்' சதுக்கம், "பிராட்வே' பகுதிகளில் சுமார் 5,000 பேர் தனித் தனிக் குழுக்களாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.

    அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நின்ற வாகனங்களில் இருந்தவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "ஹாரன்' ஒலி எழுப்பினர்.

    எரிக் கார்னரை போலீஸார் கைது செய்ய முயற்சித்த காட்சியை, பாதசாரி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்திருந்தார். அந்த விடியோவில், எரிக் கார்னர், "என்னால் சுவாசிக்க முடியவில்லை, என்னால் சுவாசிக்க முடியவில்லை' என்று கதறும் காட்சி இடம் பெற்றிருந்தது.

    எரிக் கார்னரின் அந்த கடைசி வார்த்தைகளைத் தங்கள் பதாகைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றனர்.

    மேலும், ஃபெர்குஸன் ஆர்ப்பாட்டங்களின்போது பயன்படுத்தப்பட்ட "கருப்பினத்தவர் உயிருக்கும் மதிப்புண்டு', "மனித உயிருக்கு மதிப்பளி' உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பாதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.

    மைக்கேல் பிரெளன், எரிக் கார்னர் மட்டுமின்றி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கருப்பினச் சிறுவனும் போலீஸாரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    இந்தச் சம்பவங்கள், அமெரிக்க கருப்பினத்தவரை அந்த நாட்டு போலீஸார் கையாளும் விதம் குறித்த பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai