சுடச்சுட

    

    இம்ரான் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஸ்தம்பித்தது லாகூர்

    By DN  |   Published on : 16th December 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    c15dlah

    பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி, இம்ரான் கான் கட்சியினர் நடத்திய முற்றுகை ஆர்ப்பாட்டத்தையடுத்து லாகூர் நகரம் திங்கள்கிழமை ஸ்தம்பித்தது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரவலான முறைகேடுகள் நடந்ததாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பிரதமரின் ராஜிநாமாவை வலியுறுத்தி, தனது போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தப் போவதாக சில நாட்களுக்கு முன்னர் இம்ரான் அறிவித்தார்.

    லாகூரில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார். இதையடுத்து, பெரும்பான்மையான பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களும் மூடியிருந்தன.

    சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    நகரின் முக்கியப் பகுதிகளில் இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினர் கூடி டயர்களுக்குத் தீயிட்டனர்.

     தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினருடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது.

    இருந்தபோதிலும், ஆங்காங்கே சில இடங்களில் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    லாகூர் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து முக்கியப் பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். 12,000 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    காலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், "" நான் எதிர்பார்த்ததைவிட அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை லாகூர் நகரம்  நடத்திக் காட்டியிருப்பதற்கு  நன்றி.

    அதே சமயத்தில், நகர மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் இந்த ஒரு நாள் நீங்கள் செய்யும் தியாகம், புதிய பாகிஸ்தானை உருவாக்க உதவும். நாம் இன்று தியாகம் செய்யவில்லையென்றால், நாளை நமது குழந்தைகள் தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்'' என்றார்.

    நகரம் முழுவதும் தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினர் முற்றுகையிட்டதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் ஒரு குழந்தை உள்பட மூவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இம்ரான் கான் சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் தலைநகர் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்.

    நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என அவர் கோரி வருகிறார்.

    மேலும், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் இம்ரான் கூறியுள்ளார்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கியக் கட்டடங்கள் அமைந்த தலைநகரின் பிரதான பகுதியை தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     தெஹ்ரீக்-ஏ-இன்ஸாஃப் கட்சி சார்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை, ஆளும் கட்சியினரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கவிருப்பதாக, பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இம்ரானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஃபைஸலாபாதில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, இரு தரப்பினரும் பேச்சு நடத்த முடிவாகியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai