கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா

கம்யூனிஸ நாடான கியூபாவுடனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது.

கம்யூனிஸ நாடான கியூபாவுடனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது.

இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவானாவில் மீண்டும் அமெரிக்கத் தூதரகத்தை ஏற்படுத்துவது; வர்த்தக, சுற்றுலா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதுதொடர்பாக அமெரிக்காவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஒபாமா பேசியதாவது:

கியூபா உடனான உறவை புதுப்பித்துக்கொள்ளும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்குகிறது. இதன்மூலம், அமெரிக்க, கியூபா நாட்டு மக்களுக்கு இடையே பல்வேறு வாய்ப்புகள் உருவாகும் என நாங்கள் கருதுகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும்.

கியூபா மீது அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடைகளுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுடன், இதன்மூலம் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை. ஆகையால், இந்த அணுகுமுறையைக் கைவிட்டு உறவைப் புதுப்பிக்க விரும்புகிறோம்.

கியூபா அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக காஸ்ட்ரோக்களால் ஆட்சி செய்யப்படுகிறது. கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் சீனாவுடன் அமெரிக்கா 35 ஆண்டுகளாக நட்பு கொண்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்புதான் வியத்நாமுடன் உறவை புதுப்பித்துகொண்டோம். அதுபோல கியூபா குறித்த அமெரிக்காவின் கொள்கையும் மாற்றம் பெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஐ.நா. பாராட்டு: கியூபாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் வரவேற்றுள்ளார்.

ஒபாமாவுக்கு பாராட்டு தெரிவித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாடுகளுக்கு இடையேயும் உறவை வலுப்படுத்த இதுவே முக்கிய தருணமாகும். இந்த அறிவிப்பு, நீண்ட கால நோக்கில் இரு தரப்புக்கும் இடையே அடுத்தகட்ட பரிமாற்றங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இரு அண்டைநாடுகளும் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஐநா சபையும் உதவும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com