சுடச்சுட

  

  அமெரிக்காவில் 2 காவலர்கள் சுட்டுக் கொலை: சுட்டவர் தற்கொலை

  By dn  |   Published on : 22nd December 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியூயார்க் நகர காவல் துறையைச் சேர்ந்த இரு காவலர்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை சுட்டுக் கொன்ற நபர், பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

  அமெரிக்க காவல் துறை- கருப்பினத்தவர் விவகாரம் ஓயும் முன்னரே, நாட்டையே உலுக்கியுள்ள புதிய சம்பவம் பற்றிய விவரம்:

  நியூயார்க் காவல் துறையைச் சேர்ந்த வென்ஜின் லியூ (32), ரஃபயெல் ராமோஸ் (40) ஆகிய இருவர், புரூக்லின் பகுதியில் தங்களது ரோந்துக் காரில் அமர்ந்திருந்தபோது, அந்த இடத்துக்கு வந்த நபர், எவ்வித எச்சரிக்கையும் அறிவிப்பும் இன்றி, திடீரென அவர்களின் தலைகளைக் குறி வைத்துத் தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் காவலர் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

  காவலர்களை சுட்டுக் கொன்ற நபர் இஸ்மாயில் அப்துல்லா பிரின்ஸ்லி (28). இந்த சம்பவத்துக்குப் பிறகு, அருகிலிருந்த சுரங்க ரயில் நிலையத்துக்கு ஓடிச் சென்ற அவர், துப்பாக்கியால் தன்னையே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

  முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை, பால்டிமோர் நகரில் அவரது முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த சம்பவத்தில், அப்பெண் வயிற்றில் காயமடைந்தார். இதன் பின்னர், பிரின்ஸ்லி நியூயார்க் வந்து இரு காவலர்களை சுட்டுக் கொன்றார்.

  அண்மையில், ஃபெர்குஸன் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த மைக்கேல் பிரெளன் என்ற இளைஞர் போலீஸார் ஒருவரால், தூண்டுதல் எதுவுமின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்.

  இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை தேவையில்லை என்று, பூர்வாங்க பெரு நடுவர் குழு (கிராண்ட் ஜூரி) தீர்ப்பளித்தது.

  இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவைப்பு, வன்முறை வெடித்தது. இந்நிலையில், அந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மற்றொரு சம்பவத்தில், கருப்பினத்தவரான எரிக் கார்னர் என்பவர் சட்ட விரோதமாக சிகரெட் விற்றதற்காக, காவலர் அவரைக் கைது செய்யும்போது கழுத்தை இறுக்கிப் பிடித்ததில் எரிக் கார்னர் உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாகவும் நீதிமன்ற விசாரணை தேவையில்லை என, கிராண்ட் ஜூரி தீர்ப்பளித்தது.

  இந்த முடிவும் நாடு முழுவதும் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

  இந்த சம்பவங்களுக்குப் பழி வாங்கும் நோக்குடன் செயல்படப் போவதாக இஸ்மாயில் அப்துல்லா பிரின்ஸ்லி எச்சரிக்கைத் தகவலொன்றை நியூயார்க் போலீஸாருக்கு சனிக்கிழமை காலை அனுப்பினார். மேலும், காவலர்களைக் கொலை செய்யப் போவதாக இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தனது துப்பாக்கியின் படத்தையும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, நியூயார்க் வந்த அவர், ரோந்துக் காரில் அமர்ந்திருந்த இரு காவலர்களை சுட்டுக் கொன்ற பின்னர், சுரங்க ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

  இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மேயர் பில் டிபிளாசியோ கூறுகையில், நடந்துள்ளது படுகொலையாகும். கொடிய மனிதரொருவர் இந்த நகரத்தையே தாக்கியுள்ளார் என்றார்.

   

  ஒபாமா கண்டனம்

  நியூயார்க் காவலர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார்.

  இந்தச் செயலை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது எனவும், வன்முறையையும் தீங்களிக்கும் சொற்களையும் விடுத்து, ஆறுதலான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai