சுடச்சுட

  

  இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.

  ஏர் ஏசியா நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் இந்தோனேசியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு, உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.20 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.50 மணி) புறப்பட்டது. இதில் 155 பயணிகள், விமானிகள் உள்பட 7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.

  பயணிகளில் 16 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒருவர், கொரியா நாட்டைச் சேர்ந்த மூவர் இருந்தனர்.

  இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வானிலை காரணமாக மாற்றுப் பாதையில் பறக்க அனுமதி கேட்டு விமானிகள், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டனர்.

  இந்நிலையில், புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து தகவல் துண்டிக்கப்பட்டு மாயமானது.

  அந்த விமானம் கடலில் நொறுங்கி விழுந்ததாக சில ஊடகங்கள் தெரிவித்தபோதிலும், அது உறுதி செய்யப்படவில்லை.

  இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாதி முஸ்தபா கூறுகையில், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்படும் முன்னர், வழக்கத்துக்கு மாறான பாதையில் பறக்க அந்த விமானம் அனுமதி கோரியது எனக் குறிப்பிட்டார்.

  இந்தோனேசியாவின் விமானப் போக்குவரத்து இயக்குநர் கூறுகையில், 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தை, 38,000 அடி உயரத்துக்கு கொண்டு செல்ல விமானி அனுமதி கேட்டதாகத் தெரிவித்தார். மேகங்களைத் தவிர்க்கவே விமானி அவ்வாறு அனுமதி கேட்டதாகவும் அவர் கூறினார்.

  இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால், 50,000 அடி உயரம் வரை மேகங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  விமானத்திலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தோனேசிய விமானப் படை வீரர்கள் 15 பேருடன் ஒரு கண்காணிப்பு விமானமும், 5 கப்பல்களும் காணாமல் போன விமானத்தைத் தேடி வருகின்றன.

  மேலும், அந்நாட்டின் தேசிய தேடுதல்-மீட்புக் குழு, மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. 22 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் அடங்கிய மீட்புக் கப்பல், காணாமல் போன விமானத்தை தேடி வருகிறது.

  மலேசியா தரப்பில் 3 கப்பல்களும் 3 விமானங்களும் திங்கள்கிழமை முதல் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோ தியோங் லாய் கூறினார்.

  கடலில் நொறுங்கிய விமானத்தின் பகுதிகள் மிதப்பதாக வெளியான செய்தியை அவர் மறுத்தார். விமானம் விழுந்த இடம் குறித்து தெளிவான விவரம் கிடைக்கவில்லை. தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

  சிங்கப்பூர் சார்பில் ஒரு போர் விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ஒரு விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேடும் பணியில் கப்பல்களையும் ஈடுபடுத்த சிங்கப்பூர் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுப் பிரதமர் லீ ஹஸீன் கூறினார்.

  மீட்புப் பணியில் உதவி புரியத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியது.

  இந்நிலையில், அந்த விமானத்தைக் குறித்து எந்தத் தகவலும் தற்போது தங்களிடம் இல்லை எனவும், கூடுதல் தகவல் கிடைத்ததும் அனைவருடனும் அதைப் பகிர்ந்து கொள்வதாகவும் ஏர் ஏசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தனது சுட்டுரை வலைதளத்தில் பதிவு செய்தார்.

  உங்கள் நல்லெண்ணங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. நாம் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  இந்த விமானத்தின் தலைமை விமானியான இரியந்தோ, 6,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவமுள்ளவர் என ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்தது.

  மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் அளிக்க உதவும் பொருட்டு, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தனி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

  கடந்த மார்ச் மாதம், மலேசியாவிலிருந்து 239 பேருடன் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. இதனைத் தேடும் பணி இப்போதும் இந்திய பெருங்கடலில் நடைபெற்று வருகிறது.

  மலேசிய ஏர்லைன்ஸூக்கு சொந்தமான மற்றொரு விமானம், உக்ரைன் வான்வெளியில் கடந்த ஜூலை மாதம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 298 பேரும் உயிரிழந்தனர்.

  தேடுதல் பணியில் 3 இந்தியக் கப்பல்கள்

  மாயமான விமானத்தைத் தேடும் பணியில் உதவ 3 கப்பல்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

  இதைத் தவிர, கடல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் விமானமொன்றும் தயார் நிலையில் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்தியக் கடற்படையின் ஒரு கப்பல் வங்கக் கடல் பகுதியிலும், இரு கப்பல்கள் அந்தமான் கடல் பகுதியிலிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரவு கிடைத்ததும் அவை தேடும் பணிக்கு விரையும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai