சுடச்சுட

  

  ஜப்பானிய முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பிரதமர் மோடி உறுதி

  By dn  |   Published on : 03rd September 2014 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Modi_akihito

  இந்தியாவில் முதலீடு செய்யும் ஜப்பானியர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

  இதுதொடர்பாக, ஜப்பானிய வர்த்தக அமைப்பான ஜெட்ரோ, அந்நாட்டுப் பங்குச் சந்தை அமைப்பான நிக்கி ஆகியவை சார்பில், டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

  இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். சிவப்பு நாடா முறை (அரசின் கடும் கட்டுப்பாடு) இருக்காது. இதை உறுதி செய்யவே ஜப்பானுக்கு நான் வந்துள்ளேன். வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு வசதியாக, ஏராளமான கட்டுப்பாடுகளை இந்திய அரசு தளர்த்தியுள்ளது.

  இந்தியாவில் எனது தலைமையிலான அரசு, வளர்ச்சி, உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகில் இந்தியாவைப் போல வேறு எந்த நாடும், முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக இருக்காது. ஏனெனில், இந்தியாவில்தான் ஜனநாயகமும், அதிக அளவு மக்கள்தொகையும், பொருள்களுக்கான தேவையும் இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு, ஜனநாயகம், பாதுகாப்பு, உத்தரவாதம், நீதி ஆகியவற்றுக்கு இந்தியா உறுதியளிக்கிறது.

  உற்பத்தியாளர்கள், தங்களது உற்பத்திக்கு அதிக செலவாவதை விரும்ப மாட்டார்கள். குறைந்த அளவு செலவையே எதிர்பார்ப்பார்கள். அத்தகைய சூழ்நிலை, இந்தியாவில் உள்ளது. குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள், தேவையான பணியாளர்கள், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை, தாராளமயமான சூழல் ஆகியன இந்தியாவில் உள்ளன.

  இந்தியாவுக்கு பல்லாயிரம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவில் மின்னணுச் சந்தை, குறிப்பாக செல்போன் தயாரிப்புத் தொழில், மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது.

  இந்தியாவில் 50 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

  மென்பொருளில் இந்தியாவும், வன்பொருளில் ஜப்பானும் நிபுணத்துவம் கொண்டவையாக உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட வேண்டும். ஜப்பான் இல்லாமல், இந்தியா முழுமையடையாது. இந்தியா இல்லாமல், ஜப்பான் முழுமையடையாது. ஆகையால், பொருளாதார ஒத்துழைப்பில், புதிய வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.

  இந்தியாவை உருவாக்குவதற்கு உங்களை வரவேற்கத் தயாராக உள்ளோம். இந்தியா வருவதற்கு நீங்களும் தயாராகுங்கள். உங்களுக்கு எந்த வசதிகள் வேண்டுமானாலும், இந்திய அரசு செய்து தரும். ஆசியக் கண்டம் அமைதியாகவும், வளமானதாகவும் திகழ்வதற்கு ஒத்துழைக்கும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

  இந்தியாவில் எளிதான முறையில் வர்த்தகம் செய்வதற்காக எனது தலைமையிலான அரசு, கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எனது அரசு தயாராக உள்ளது.

  கடவுள் தந்த பரிசு: பூலோகத்தில், முதலீட்டுக்கென கடவுள் பரிசளித்த இடமாக இந்தியா திகழ்கிறது. இதனால், இந்தியாவில் இருந்து உங்களது தயாரிப்புகளை உலகச் சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். ஜப்பானில் 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன அதிசயத்தைச் செய்தீர்களோ, அதனை இந்தியாவில் 2 ஆண்டுகளில் செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகம் உள்ளன என்றார் மோடி.

  ஜப்பான் பயணம் வெற்றி: இதனைத் தொடர்ந்து, டோக்கியோவில் இந்தியா வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், ""எனது ஜப்பானியட்க் பயணம், மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. எனது பயணத்தின் மூலம், இந்தியாவின் உள்கட்டுமானம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

  ஜப்பான் மன்னருக்கு பகவத் கீதை பரிசு

  தனது ஜப்பான் பயணத்தின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, டோக்கியோவில் உள்ள அரண்மனையில் அந்நாட்டு மன்னர் அஹிகிடோவை மோடி சந்தித்தார். அப்போது அவரிடம் பகவத் கீதை புத்தகத்தை மோடி பரிசாக அளித்தார்.

  இதுகுறித்து இந்தியா வம்சாவளியினர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: "பகவத் கீதை புத்தகத்தை ஜப்பான் மன்னரிடம் பரிசாக அளித்தபோது, இந்தச் சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவில் என்ன நடைபெறப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. இதை முன்வைத்து, தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெறலாம். மதச்சார்பின்மை பேசும் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள், இதுகுறித்து பிரச்னைகளை எழுப்பலாம்' என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai