Enable Javscript for better performance
ஐ.எஸ். பிடியிலிருந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை- Dinamani

சுடச்சுட

    

    ஐ.எஸ். பிடியிலிருந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை

    By dn  |   Published on : 14th September 2014 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    original

    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிணைக்கைதியாக இருந்த பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸ் (44) தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

    அவர் படுகொலை செய்யப்படும் காட்சி அடங்கிய விடியோவை ஐ.எஸ். சனிக்கிழமை இரவு வெளியிட்டது.

    ""அமெரிக்காவின் துணை நாடுகளுக்கு ஒரு செய்தி'' என்ற பெயரில், இரண்டு நிமிடம் 27 விநாடிகள் கொண்ட விடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் படம் முதலில் இடம்பெற்றுள்ளது. பின்னர், ஹெய்ன்ஸ் பேசுவதாக அமைந்துள்ளது. "என் பெயர் டேவிட் ஹெய்ன்ஸ். என் சாவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன்தான் முற்றிலும் பொறுப்பு' என்று அவர் கூறுகிறார்.

    தொடர்ந்து, "இராக்கில் ஜிஹாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்காவுடன் கூட்டணி சேர்ந்தீர்கள். முந்தைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரைப் போலவே, அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்க்கத் துணிவில்லாமல், அந்நாட்டுடன் இணைந்து இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள்.

    இந்தக் கூட்டணி மூலம், உங்களுடைய அழிவை விரைவுபடுத்துவதோடு, வெற்றி காணவே முடியாத மற்றொரு போருக்கு பிரிட்டிஷ் மக்களை இழுத்துச் செல்கிறீர்கள்.

    நாடாளுமன்றத்தின் சுயநலம் மிகுந்த நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷ் மக்களாகிய நாங்கள் பெரிய விலை தர வேண்டியுள்ளது' என்று அவர் கூறுகிறார்.

    பின்னர் முகமூடி அணிந்த ஒரு நபர், "இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக குர்துப் படையினருக்கு ஆயுதம் வழங்கிய கேமரூனின் நடவடிக்கைக்குத் தனது உயிரையே இந்த மனிதர் விலையாகத் தருகிறார்' என்று குறிப்பிடுகிறார்.

    மேலும், தங்கள் பிடியிலுள்ள மற்றொரு பிரிட்டிஷ் பிரஜையை படுகொலை செய்யப் போவதாக அவர் மிரட்டியுள்ளார்.

    தொடர்ந்து, ஹெய்ன்ஸ் தலையைத் துண்டிக்கும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

    டேவிட் ஹெய்ன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். சர்வதேச தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியப் பகுதி, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் மனித நேயத் தொண்டுபுரிந்துள்ளார்.

    ஏற்கெனவே, சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க நிருபர் ஜேம்ஸ் ஃபோலி (40) கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    மற்றொரு அமெரிக்க நிருபர் ஸ்டீவன் ஸாட்லாஃப் (31) இம்மாதம் 2-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இவரது தலையும் துண்டிக்கப்பட்டது. ஸாட்லாஃப் கொலை செய்யப்படும் காட்சியின் இறுதியில், அடுத்ததாக ஹெய்ன்ஸ் கொல்லப்படுவார் என்று அவரது படம் காண்பிக்கப்பட்டிருந்தது.

    அவர்கள் இருவரும் படுகொலை செய்யப்படும் விடியோ காட்சியில் இடம் பெற்ற அதே முகமூடி நபர்தான் ஹெய்ன்ஸ் விடியோவில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

    சனிக்கிழமை இந்த விடியோ வெளியிடப்பட்டபோதிலும், ஹெய்ன்ஸ் எப்போது கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

    இந்நிலையில், அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பிரதமர் கேமரூன் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai