Enable Javscript for better performance
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் சிறிய விமானத்தில் தரையிறங்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் சிறிய விமானத்தில் தரையிறங்கியவர் கைது

    By dn  |   Published on : 17th April 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில், சிறிய வகை விமானம் மூலம் புதன்கிழமை தரையிறங்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

    டக் ஹியூஸ் (61) என்ற அந்த நபர் தபால்துறை ஊழியர் எனவும், அரசியலில் பணபல ஆதிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் பறந்து சென்று, பலத்த பாதுகாப்பு மிக்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் அவர் தரையிறங்கியது உயிரைப் பணயம் வைக்கும் செயல் என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    எனினும், இந்தப் போராட்டம் குறித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு தாம் முன்கூட்டியே தகவல் அளித்ததாக டக் ஹியூஸின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "எனது போராட்டம் அகிம்சை முறையிலானது என்பதை நான் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன்.

    ஒரு மிகச் சிறிய ஹெலிகாப்டர் விமானம் யாருடைய உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. எனது வருகை ஊழலை மட்டுமே அச்சுறுத்தும்' என்று அந்த வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஊழலுக்கு எதிரான கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 535 பேருக்கும் தனித்தனியாக பட்டுவாடா செய்யவே விமானம் மூலம் அங்கு செல்வதாக அவரது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் தரையிறங்கியது டக் ஹியூஸ் என்ற விவரத்தை போலீஸார் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "அமெரிக்கத் தபால்துறை முத்திரை கொண்ட சிறிய வகை விமானத்தில் ஒருவர் தரையிறங்கினார்' என்று மட்டுமே குறிப்பிட்டனர்.

     

    "சுட்டு வீழ்த்தியிருப்போம்'

     

    டக் ஹியூஸ் நாடாளுமன்றக் கட்டடத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கியிருந்தாலும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினர் தயாராக இருந்ததாக நாடாளுன்ற கீழவை பாதுகாவல் குழுத் தலைவர் மைக்கேல் மெக்கால் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    அவைத் தலைவர் அறையையொட்டிய மாடப் பகுதியில் பெரிய துப்பாக்கிகளுடன் அந்த விமானத்தை சுட்டு வீழத்த பாதுகாப்பு வீரர்கள் தயாராக இருந்தனர். எனினும், அந்த விமானம் சற்று தொலைவிலேயே தரையிறங்கிவிட்டது. நாடாளுமன்றக் கட்டடத்தை அந்த விமானம் இன்னும் கொஞ்சம் நெருங்கியிருந்தாலும் அதனை சுட்டு வீழ்த்தியிருப்போம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai