Enable Javscript for better performance
ஒபாமா கைவண்ணத்தில் மோடி...- Dinamani

சுடச்சுட

  
  modi_obama

  கடந்த 1959-ஆம் ஆண்டு.... அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது அதுவே முதல்முறை. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டுவைட் டி. ஐஸனோவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

  அதன் பிறகு, ரிச்சர்டு நிக்ஸன், ஜிம்மி கார்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் என அந்நாட்டின் பல அதிபர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

  அவ்வாறு அமெரிக்க அதிபர் ஒருவர் நம் நாட்டுக்கு வருவதோ, அதன் ஒருபகுதியாக சில ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடுவதோ புதிய விஷயமல்ல. இந்தக் காட்சியை பல தருணங்களில் இந்திய மக்கள் பார்த்துள்ளனர். அதேவேளையில், எந்த ஒரு அமெரிக்க அதிபரும் தனது பதவிக் காலத்தின்போது இரண்டு முறை இந்தியாவுக்கு வந்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு. ஆனால், அதற்கு விதிவிலக்கு அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா.

  கடந்த 2010-ஆம் ஆண்டு அரசுமுறைப் பயணமாக அவர் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு தினத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரியில் மீண்டும் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். அப்போது மரபுகளை விலக்கி வைத்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஒபாமாவை ஆரத் தழுவி வரவேற்றார். அந்தத் தருணம் இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய உறவு மலர்ந்ததற்கான தொடக்கம் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்தது.

  மோடி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதலே, அவரது தலைமைப் பண்புகளை பாராட்டி ஒபாமா பேசி வருகிறார். மோடி அணியும் குர்தாவை அணிய விரும்புவதாக இந்தியப் பயணத்தின்போது ஒபாமா கூறியிருந்தார். இது, ஒரு நாட்டின் தலைவராக மட்டும் மோடியைப் பார்க்காமல், அவரை தனது தோழனாக ஒபாமா கருதியதற்கான அடையாளமாகவே தோன்றியது.

  அதற்கும் மேலாக, கடந்த டிசம்பர் மாதம் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு மோடி சென்றிருந்தபோது அவரை "செயல் வீரர்' என்று ஒபாமா பாராட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இந்த உறவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், டைம் பத்திரிகையில் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒபாமா கட்டுரை எழுதியுள்ளார். டைம் பத்திரிகை வெளியிட்ட உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலில் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, "இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி' என்ற தலைப்பில் மோடி தொடர்பான கட்டுரையை ஒபாமா எழுதியுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்ததைப் பற்றி அக்கட்டுரையில் ஒபாமா விவரித்துள்ளார்.

  "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக மோடி விளங்குகிறார்; மோடியின் வாழ்க்கை எவ்வாறு அடிமட்டத்தில் தொடங்கி உச்ச நிலையை அடைந்ததோ அதைப் போலவே, இந்தியாவின் எழுச்சியும் அமைந்துள்ளது' என்று அந்தக் கட்டுரையில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

  தன் நாட்டு மக்களை சுட்டுரை மூலம் இணைத்து, இந்தியாவை கனிணித் தொழில்நுட்ப நாடாக உருவாக்க மோடி முயன்று வருவதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்களை நிறைவேற்றுவது மோடியின் லட்சியத் திட்டம் என்றும் கட்டுரை வாயிலாக ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

  ஒரு நாட்டின் தலைவரை, மற்றொரு நாட்டின் தலைவர் புகழ்வது சாதாரண விஷயம்தான் என்று இதைப் புறந்தள்ளிவிட முடியாது. சர்வதேசத் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் நிலையில் மோடியை பல இடங்களில் ஒபாமா தொடர்ந்து பாராட்டி வருவது உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai