Enable Javscript for better performance
ஃபிலிப்பின்ஸில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 43 கமாண்டோக்கள் பலி - Dinamani

சுடச்சுட

  

  ஃபிலிப்பின்ஸில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுடன் மோதல்: 43 கமாண்டோக்கள் பலி

  By DN  |   Published on : 27th January 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  philipp

  மணிலா, ஜன. 26: ஃபிலிப்பின்ஸில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதத் தடுப்பு படையைச் சேர்ந்த 43 கமாண்டோ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

  இது தொடர்பாகத் தலைநகர் மணிலாவில் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்த விவரம்: மகிந்தானோ மாகாணத்தில், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மமசாபானோ எனுமிடத்துக்கு பயங்கரவாதத் தடுப்பு கமாண்டோ படை வீரர்கள் சனிக்கிழமை சென்றனர்.

  கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் காவல் துறையினர் தங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும்.

  எனினும், பயங்கரவாதிகள் இருவரைத் தேடும் நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டதால், முன்கூட்டித் தெரிவிக்காமல் அப்பகுதியில் சனிக்கிழமை திடீர் தேடுதல் வேட்டையைக் காவல் துறையினர் மேற்கொண்டனர்.

  இந்நிலையில், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியினருக்கும் பயங்கரவாதத் தடுப்பு படையினருக்கும் மோதல் துப்பாக்கிச் சண்டை மூண்டது. 11 மணி நேரம் நடைபெற்ற சண்டையில் குறைந்தபட்சம் 43 கமாண்டோ வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இது தொடர்பாக மமசபானோ மேயர் தாஹிருதீன் பென்ஸர் அம்பாதுவன் தெரிவிக்கையில், இதுவரை 14 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 16 வீரர்களின் உடல்கள் சண்டை நடந்த பகுதியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது என்றார்.

  நிலைமையை நேரில் சென்று பார்வையிட, ஃபிலிப்பின்ஸ் காவல் துறை துணைத் தலைமை இயக்குநர் லியனார்டோ எஸ்பினா, உள்துறைச் செயலர் மானுவல் ராக்ஸஸ் ஆகியோர் மகிந்தானோ மாகாணத்துக்கு திங்கள்கிழமை சென்றனர்.

  காவல் துறைத் தலைவர் லியனார்டோ எஸ்பினா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், "மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயங்கரவாதியைத் தேடி போலீஸார் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். நாட்டின் தென் பகுதியில் அண்மைக்காலமாக நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு அந்த நபர் திட்டமிட்டார் என்று தெரிய வந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

  மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி சார்பில் அரசுத் தரப்பினருடன் அமைதிப் பேச்சு நடத்தி வரும் மொஹஜிர் இக்பால் இந்த சம்பவம் தொடர்பாகத் தெரிவித்தது:

  இந்த சம்பவத்தையடுத்து, அமைதிப் பேச்சு எப்படித் தொடரும் எனக் கூற முடியாது. அமைதி உடன்படிக்கையை மேற்பார்வையிட்டு வரும் குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சண்டையில், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை.

  தென் கிழக்காசிய பகுதியில் செயல்பட்டு வரும் ஜீமா இஸ்லாமியா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஸூல்ஃபிக்லி பின் ஹிர் என்கிற பயங்கரவாதியைத் தேடி,

  மமசாபானோவுக்கு கமாண்டோக்கள் சென்றதாகத் தெரிகிறது என்று கூறினார்.

  மார்வான் என்ற பெயரிலும் அறியப்படும் ஸூல்ஃபிக்லி பின் ஹிர், அமெரிக்கா தேடி வரும் முக்கிய பயங்கரவாதி என்பது குறிப்பிடத் தக்கது. இவரைப் பிடித்துக் கொடுக்க 50 லட்சம் டாலர் (சுமார் ரூ. 30 கோடி) பரிசை அமெரிக்கா அறிவித்துள்ளது.

  ஃபிலிப்பின்ஸில் 10 முதல் 12 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2003-ஆம் ஆண்டு ஃபிலிப்பின்ஸில் தலைமறைவான ஸூல்பிக்லி, உள்ளூரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி அளித்து வருவதாக அந்நாட்டு ராணுவத்தினர் குறிப்பிட்டனர்.

  மேலும், ஃபிலிப்பின்ûஸச் சேர்ந்த அப்துல் பாஸித் உஸ்மான் என்பவரையும் அமெரிக்கா தேடி வருகிறது. வெடிகுண்டு நிபுணரான இவர், அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது. இவரைப் பிடித்துத் தர அமெரிக்கா ரூ. 6 கோடி பரிசாக அறிவித்துள்ளது.

  கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள அந்நாட்டில், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தன்னாட்சி கோரி பல ஆண்டுகளாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.

  இது தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  தன்னாட்சியை வலியுறுத்தி மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி அமைப்பினர் ஆயுதமேந்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், அக்குழுவினருடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு அவர்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

  மேலும், அந்த உடன்படிக்கையின் அடிப்படையில், அக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குக் காவல் படையினர் செல்லும் முன்னர், மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியிடம் தெரிவிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai