Enable Javscript for better performance
எகிப்துப் புரட்சி நினைவு தின கலவரம்: 23 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    கெய்ரோ, ஜன. 26: எகிப்தில் புரட்சி ஏற்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையே

    ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

    ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எகிப்தில் ஆட்சிபுரிந்த ஹோஸ்னி முபாரக், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அந்தப் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் நாட்டின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள்

    நடத்தினர். அப்போது காவல் துறையினரோடு மோதல் ஏற்பட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 23 அதிகரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    முபாரக்கைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த முகமது மோர்ஸி. எகிப்து ராணுவத்தால் 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்

    பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போதிலிருந்து மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

    பதற்றம் நிறைந்த வடக்கு சீனாய் பகுதியில் தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

     கடந்த அக்டோபரில், ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 31 வீரர்கள் உயிரிழந்தனர். அது முதல் அந்தப் பகுதியில் தடை உத்தரவு அமலில் உள்ளது.

    புரட்சி நடைபெற்றபோது ராணுவத் தளபதியாக இருந்த அப்துல் ஃபத்தா அல்சிசி தற்போது எகிப்து அதிபராக உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai