Enable Javscript for better performance
ஜப்பான் பிணைக் கைதி படுகொலை: உறுதி செய்தது ஐ.எஸ்.- Dinamani

சுடச்சுட

    

    தங்களின் பிடியிலிருந்த ஜப்பானியப் பிணைக் கைதிகளில் ஒருவரைப் படுகொலை செய்ததை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதி செய்தனர்.

    இராக் மற்றும் சிரியாவில் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒலிபரப்பாகும் அல்-பாயன் வானொலியில் வெளியிட்ட செய்தியில் அந்த இயக்கம் தெரிவித்த விவரம்:

    இஸ்லாமிய தேசம் அளித்த எச்சரிக்கையை நிறைவேற்றியுள்ளது. கெடு நேரம் முடிந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த பிணைக் கைதி ஹருனா யுகாவா கொல்லப்பட்டார்.

    மற்றொரு பிணைக் கைதியான கென்ஜி கோடோ, தனது உறவினர்களுடன் பேசி வருகிறார்.

    அவரின் விடுதலைக்கு பரிமாற்றமாக, ஜோர்டன் நாட்டின் சிறையில் உள்ள எங்களது சகோதரி சஜிதா அல்-ரிஷாவியை விடுவிப்பது தொடர்பாக ஜப்பான் அரசை வலியுறுத்தும்படி கென்ஜி கோடோ தனது உறவினர்களிடம் கூறி வருகிறார் என அல்-பாயன் வானொலியில் அறிவிக்கப்பட்டது.

    அம்மானில்  விடுதியொன்றில் 2005-ஆம் ஆண்டு நவம்பரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் சஜிதா அல்-ரிஷாவி. அந்தத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சஜிதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அம்மான் வெடிகுண்டுத் தாக்குதலை அல்-காய்தா அமைப்பு நடத்தியதாக அதன் இராக் தலைவர் அபு முசப் அல்-ஸர்காவி பொறுப்பேற்றார். இந்த அமைப்பே ஐ.எஸ்.ஸின் முன்னோடியாகும்.

    2006-இல் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் அல்-ஸர்காவி கொல்லப்பட்டார். அவரது உதவியாளராக இருந்த சமீர் அல்-ரிஷாவி, சஜிதாவின் சகோதரர். அமெரிக்கத் தாக்குதலில் சமீர் கொல்லப்பட்டார்.

    புதிய விடியோ வெளியீடு: ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதிதாக வெளியிட்டுள்ள விடியோவில், கென்ஜி கோடோ தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவரது கையில் ஒரு புகைப்படத்தைப் பிடித்திருப்பது போல உள்ளது. அது, படுகொலை செய்யப்பட்ட ஹருனா யுகாவாவின் உடலின் புகைப்படமாகும்.

    அந்த விடியோவில் இடம் பெறும் ஒலிப்பதிவில், யுகாவாவின் மரணத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேதான் காரணம் என ஒரு குரல் குறிப்பிடுகிறது. அது கென்ஜி கோடோவின் குரல் எனக் கூறப்படுகிறது.

    ஐ.எஸ். கேட்ட பிணைத் தொகையான 20 கோடி டாலரை (சுமார் ரூ. 1,234 கோடி) 72 மணி நேர கெடுவுக்குள் அளிக்காதது பிரதமர் அபேயின் தவறு என அந்தக் குரல் தெரிவிக்கிறது.

    இனி ஐ.எஸ். அமைப்பு பணம் கேட்கவில்லை. அவர்களது "சகோதரியை' விடுவிக்க வேண்டும். சஜிதாவை விடுவித்து அவர்களிடம் ஒப்படைத்தால் நான் விடுதலை செய்யப்படுவேன் என்று கென்ஜி கோடோவின் குரல் தெரிவிக்கிறது.

    ஜப்பானைச் சேர்ந்த ஹருனா யுகாவா, கென்ஜி கோடோ ஆகிய இருவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால், 72 மணி நேரத்துக்குள் 20 கோடி டாலரை ஜப்பான் அரசு பிணைத் தொகையாக அளிக்க வேண்டும் என்று ஐ.எஸ். மிரட்டியது.

    கெடு நேரம் முடிவுற்ற நிலையில், ஹருனா யுகாவா படுகொலை செய்யப்பட்ட விடியோ காட்சி சனிக்கிழமை இரவு வெளியானது.

    சர்வதேச அமைதிக் கொள்கையைப் பின்பற்றி வரும் ஜப்பானுக்கு வழக்கமான ராணுவ அமைப்பு இல்லை. இந்நிலையில், தங்களது நாட்டைச் சேர்ந்த ஒருவர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி ஜப்பான் மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai