Enable Javscript for better performance
சீனா, ரஷியாவுடனான இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்துவதே ஒபாமாவின் திட்டம்: சீன அரசு பத்திரிகை- Dinamani

சுடச்சுட

    

    சீனா, ரஷியாவுடனான இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்துவதே ஒபாமாவின் திட்டம்: சீன அரசு பத்திரிகை

    By dn  |   Published on : 28th January 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "சீனா, ரஷியா நாடுகளுடனான இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்துவதே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் திட்டம்; அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய நட்புறவை வைப்பது இந்தியா-சீனா உறவில் பிரச்னைகளை ஏற்படுத்தும்' என்று சீன அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சீன அரசால் நடத்தப்படும் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,"ஒபாமாவின் திட்டம், தெள்ளத் தெளிவாக புரிகிறது. சீனா, இந்தியா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்த அவர் விரும்புகிறார். அதேபோல் ரஷியா - இந்தியா இடையேயான உறவிலும் அவர் விரிசலை ஏற்படுத்த நினைக்கிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்தில், இந்திய குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து ஒபாமா இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒபாமாவின் இந்தியப் பயணம் குறித்து, சீனாவின் குவாங்டாங் ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசிரியர் ஜூ பாங்யின் தெரிவித்ததாவது:

    ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகளிடையேயும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சீன வளர்ச்சியை தடுப்பதற்காக, இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு சேராது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

    தெற்காசியாவில் இந்தியாவை தனது கூட்டாளியாக்கும் விதமாக அந்நாட்டின் ராணுவ, பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது. ஆனால், சர்வதேச விவகாரங்களில், அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா செயல்படாததாலும், தாமதமான சீர்திருத்த நடவடிக்கைகளாலும் இந்தியா மீது அமெரிக்கா ஏற்கெனவே விரக்தியில் இருந்து வருகிறது.

    இருப்பினும், சீனாவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து, அமெரிக்காவை நோக்கி இந்தியாவை தள்ளுகிறார் ஒபாமா.

    மற்ற விவகாரங்களைக் காட்டிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே மோடி அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார். இதனால், இந்தியாவில் சீனாவின் முதலீடு, தொழில்நுட்பம் அவருக்கு தேவைப்படுகிறது. வெளியுறவுக் கொள்கையில், அணிசேரா கொள்கையை இந்தியா நீண்டகாலமாக பின்பற்றுகிறது. இதுபோன்ற காரணங்களினால், அமெரிக்காவுடன் இந்தியா ஒருபோதும் கூட்டு சேராது என அவர் தெரிவித்தார்.

    சர்வதேச விவகாரங்களுக்கான சீன பல்கலைகழகங்களின் ஆராய்ச்சியாளர் பூ ஷியாகியாங் தெரிவிக்கையில், "சர்வதேச விவகாரங்களில் முக்கிய பங்காற்ற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இதற்கு, அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. ஆனால், அமெரிக்காவுடன் நட்புறவு வைத்தால், சீனா-இந்தியா உறவு பாதிக்கப்படும் என இந்திய அரசு தெரிந்து வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இதை நன்கு புரிந்து வைத்துள்ளார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai