Enable Javscript for better performance
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியத் தூதர்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு: இந்தியத் தூதர்

    By dn  |   Published on : 28th January 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக இஸ்லாமாபாதில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பயங்கரவாதத்தின் நிழலில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை. பயங்கரவாதம் உள்பட இந்தியா சுட்டிக்காட்டிய பிரச்னைகளுக்கு பாகிஸ்தான் தீர்வு கண்டால்தான், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது.

    ஜமா- உத்-தவா அமைப்புக்கு, ஐ.நா. சபை கடந்த 2008ஆம் ஆண்டு தடை விதித்தது. ஆனால், அந்த அமைப்பின் தலைவரும், மும்பை பயங்கரவாத தாக்குதலின் காரணகர்த்தாவுமான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவும், அமெரிக்காவும் செயல்படவில்லை. இதுதொடர்பாக எந்த நாடும் அச்சப்படத் தேவையில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நிலவிய முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அணுசக்தி என்றால், பிற நாடுகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்குத்தான் என்று தவறான புரிதல் நிலவுகிறது என்றார் ராகவன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai