மாவீரர் நாள் நிகழ்ச்சி கூடாது: ராஜபட்ச, இலங்கை அரசு மிரட்டல்

தனி ஈழத்துக்கான போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று

தனி ஈழத்துக்கான போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் நினைவாக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று இலங்கை அரசும், அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
 இலங்கை ராணுவத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக போரிட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் முதலில் உயிர் நீத்த சங்கரின் நினைவு நாளான நவம்பர் 27-ஆம் தேதியை மாவீரர் நாள் என அறிவித்ததுடன், உயிர் நீக்கும் அனைத்து வீரர்களுக்கும் அந்த நாளில் அஞ்சலி செலுத்துவதை விடுதலைப் புலிகள் அமைப்பு வழக்கமாகக் கொண்டிருந்தது.
 இதனிடையே, 2009-ஆம் ஆண்டில் இறுதிப் போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாவீரர் நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
 இதை முன்னிட்டு, "மாவீரர் தினத்தை அனுசரிப்போம்' என்ற வாசகங்களுடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஆனால், நினைவு நாள் நிகழ்ச்சி எதுவும் நடத்தக் கூடாது என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து அந்நாட்டுக் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறுகையில், "தீவிரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
 ராஜபட்ச எச்சரிக்கை: இதனிடையே, "மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்தவும், தமிழீழக் கோரிக்கையை மீண்டும் எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என்று முன்னாள் அதிபர் ராஜபட்ச வலியுறுத்தினார்.
 விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது இலங்கை அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"20 தமிழ்க் கைதிகளை விடுவிப்போம்'
 அரசியல் காரணங்களுக்காக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 தமிழ்க் கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சட்டத் துறை அமைச்சர் விஜயதேசா ராஜபட்ச கூறியதாவது:
 தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 59 கைதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களை விடுவிப்பதால் தேசப் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, இவர்களில் 39 பேர் கடும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் அடிப்படையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com