
"இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் ராணுவ அமைச்சர்' என்று அமெரிக்காவால் வருணிக்கப்படும் முக்கியத் தலைவரைக் குறி வைத்து அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், அவர் காயங்களுடன் உயிர் தப்பியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவரான ஒமர் அல்-சிசனி, அமெரிக்காவால் தேடப்படும் முக்கியப் பயங்கரவாதிகளில் ஒருவர்.
சிரியாவில் அவரைக் குறி வைத்து கடந்த வார இறுதியில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் அல்-சிசனி கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
அந்தத் தாக்குதல்களில் மேலும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்ததாவது:
ஒமர் அல்-சிசனிக்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலில் அவர் உயிரிழக்கவில்லை.
அல்-சிசனி சென்ற வாகனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அவரது உதவியாளர்கள் உயிரிழந்தனர். அவர் காயமடைந்தார்.
ராக்கா மாகாணத்திலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அல்-சிசனிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார் அவர்.
சிசனியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜார்ஜியாவின் பான்கிஸி கோர்க் பகுதியைச் சேர்ந்த ஒமர் அல்-சிசனி, ரஷியாவுக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றவர்.
2006-ஆம் ஆண்டு ஜார்ஜியா ராணுவத்தில் இணைந்து சண்டையிட்ட அவர், சிரியாவில் தலையெடுத்து வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 2013-இல் இணைந்தார்.
அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் டாலர் (சுமார் ரூ.33.5 கோடி) பரிசளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.