அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக துருக்கியைச் சேர்ந்த டோகன் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
ஆப்கானிஸ்தான், ஈரானைச் சேர்ந்த அகதிகளை கொண்ட படகு, துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
கிரீஸ் தீவான லெஸ்போûஸ அடையும் முன்பே அந்தப் படகு கடலில் மூழ்கியது.
இதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
படகு கவிழ்ந்த இடத்துக்கு விரைந்த துருக்கி கரடலோரக் காவல் படையினர் நீரில் தத்தளித்த 9 பேரை மீட்டனர். மேலும் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் விவகாரத்தில் துருக்கி - கிரீஸ் இடையே கடந்த திங்கள்கிழமை ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து, 5 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகள், துருக்கியையொட்டி ஏஜியன் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு கிரீûஸ அடைகின்றனர்.
பின்னர், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் தஞ்சமடைகின்றனர்.
இது தவிர, சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி எல்லையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அகதிகள் விவகாரத்தில் துருக்கி - கிரீஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, கிரீஸிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அகதிகளை துருக்கி ஏற்கும்.
அவ்வாறு துருக்கி ஏற்கும் ஒவ்வொரு அகதியின் மறுவாழ்வுக்கான செலவு முழுவதையும் ஐரோப்பிய யூனியன் ஏற்க வேண்டும்.
துருக்கி - கிரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்ட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த துருக்கிக்கு தேவைப்படும் மிகப் பெரிய தொகையை ஐரோப்பிய யூனியன் வழங்க வேண்டும்.
இதைத் தவிர, அகதிகள் நலனில் துருக்கி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பிரதி உபகாரமாக, ஐரோப்பிய யூனியன் அமைப்பில் துருக்கியை உறுப்பினராக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 8.5 லட்சம் அகதிகள் துருக்கி வழியாக கிரீஸ் சென்றடைந்தனர். இவ்வாண்டு தொடக்கம் முதல் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கிரீஸ் சென்றடைந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர்.
ஆனால் அகதிகள் தங்கள் நாடுகள் வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக ஸ்லோவீனியா, செக் உள்ளிட்ட நாடுகள் தங்களின் எல்லைகளை அடைத்துவிட்டன.