சோமாலியாவில் அமெரிக்க சிறப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்: 10 பயங்கரவாதிகள் சாவு

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை தெரிவித்தது.
Published on
Updated on
1 min read

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது:

அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரைக் குறி வைத்து, அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நகருக்குள் அமெரிக்க சிறப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு சென்றனர்.

அந்தப் பயங்கரவாதத் தலைவர் தங்கியிருந்த பகுதியில் தரையிறங்கிய வீரர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சண்டையில், அந்த பயங்கரவாதத் தலைவர் உள்பட 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் கூறியதாவது:

சோமாலியாவில் அந்த நாட்டுப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது ஆலோசனை அளிப்பதற்காகவே அமெரிக்க சிறப்புப் படையினர் அவர்களுடன் சென்றனர்.

அந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றார் அவர்.

சோமாலியாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 150 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக 50 அமெரிக்க சிறப்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

1990-ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் படையினர் சோமாலியாவில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளின்போது ஏராளமான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால், சோமாலிய உள்நாட்டுச் சண்டையில் அமெரிக்க வீரர்களை ஈடுபடுத்துவது சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com