
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்துவது வரவேற்கத்தக்கது என்று அந்நாட்டு அமைச்சரும், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சர்வதேச விசாரணையைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாகவும் புகார் எழுந்தது.
இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தன.
இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்திருந்தது. இதனிடையே, இலங்கை நாட்டின் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராக சரத் பொன்சேகா கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பேசிய பொன்சேகா, இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரின்போது ஒரு சிலர் குற்றம் இழைத்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில் இலங்கை ராணுவத்துக்கு உள்ள கண்ணியமும், மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதை, இலங்கை ராணுவத்தின் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி என்ற முறையில் வரவேற்கிறேன்.
அத்தகைய விசாரணையைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எதுவும் இலங்கைக்கு இல்லை. இறுதிக்கட்டப் போரில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சரணடைய முன்வந்தபோது அவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாகப் புகார் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ன நடந்தது? என்ற உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் பொன்சேகா.