Enable Javscript for better performance
சிரியா: \\\"அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை\\\'- Dinamani

சுடச்சுட

    

    சிரியா: "அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை'

    By  டமாஸ்கஸ்,  |   Published on : 15th April 2016 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    22

    சிரியா பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, அந்த நாட்டு அதிபர் அல்-அஸாத் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
     சிரியாவில் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா. தலைமையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் புதன்கிழமை தொடங்கியது.
     சிரியாவில், அதிபர் அல்-அஸாத் இடம்பெறாத இடைக்கால அரசை அமைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
     இந்த நிலையில், சிரியா வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஃபைஸல் மெக்தாத் கூறியதாவது:
     சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, எதிர்க்கட்சிகளின் நிபந்தனையை ஏற்று அதிபர் அல்-அஸாத் பதவி விலகுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
     அதிபர் பதவி விலகுவதுதான் பிரச்னைக்குத் தீர்வு என்ற யோசனை காலாவதியான ஒன்று. வெற்றி பெறாததும், ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட.
     அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவதன் மூலம், ஆட்சிக் கவிழ்ப்பைத் தூண்டவும், அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
     உண்மையில், சிரியாவில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்ட சவூதி அரேபியாவையும், துருக்கியையும் தவிர வேறு எந்த நாடும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை.
     இந்த ஐந்து ஆண்டு காலப் போரில், அதிபர் அல்-அஸாத் போரிட்டு வருவது பயங்கரவாதத்தை எதிர்த்துதான் என்பதை அந்த நாடுகள் உணர்ந்து கொண்டதே அதற்குக் காரணம் என்றார் ஃபைஸல்.
     ஏற்கெனவே, சிரியாவில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க சம்மதம் தெரிவித்திருந்த அல்-அஸாத், இடைக்கால மாற்று அரசை அமைப்பதற்கு எதிர்ப்பு
     தெரிவித்திருந்தார்.
     சிரியா அமைதி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இடைக்கால அரசை அமைப்பதற்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் 2012-ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டன.
     எனினும் அந்த ஒப்பந்தத்தில், இடைக்கால அரசில் அதிபர் அல்-அஸாதின் நிலை குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
    நாடாளுமன்றத் தேர்தல்
     சிரியா நாடாளுமன்றத்துக்கான தேர்தல், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
     250 உறுப்பினர்களைக் கொண்ட சிரியா நாடாளுமன்றம் பெயரளவில் மட்டுமே இயங்கினாலும், அரசுக்கு மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் தேர்தல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
     நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் சிரியாவில், உள்நாட்டுப் போர் சூழலில் நடைபெறும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது.
     ஏற்கெனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அல்-அஸாத் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேர்தல் முடியும் வரை கலந்துகொள்ள முடியாது என்று அறிவித்திருந்த சிரியா அரசு, வெள்ளிக்கிழமை முதல் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai