Enable Javscript for better performance
வங்கதேச உணவகத் தாக்குதல்: மேலும் 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வங்கதேச உணவக தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரை வங்கதேச போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

    டாக்கா உணவகத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, தருஸ்லாம் பகுதியில் தங்கியிருந்த அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளை தீவிரவாத தடுப்பு போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டாக்கா உணவகத் தாக்குதலில் அவர்களுக்கு தொடர்பிருப்பதை ஒப்புக் கொண்டனர். வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களுடன் டாக்காவுக்குள் நுழைந்த அவர்கள் பின்னர் வெடிகுண்டுகளைத் தயாரித்து இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து 875 கிராம் வெடிபொருள்கள், 25 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மர்ஸான் என்ற அமைப்பும் டாக்கா உணவகத் தாக்குதலுக்கு இரண்டாவது மூளையாக செயல்பட்டது தீவிர விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

    வங்கதேச தலைநகர் டாக்கா உணவகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை என வங்கதேச அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    ஆனால், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்கெனவே தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் அமைப்புக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புடனும், அன்ஸருல்லா வங்க குழுவுக்கு (ஏ.பி.டி.) அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடனும் சித்தாந்த ரீதியான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai