Enable Javscript for better performance
குவைத் நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    குவைத் நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் வெற்றி

    By DIN  |   Published on : 28th November 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kuwait

    குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற யூசுப் சலே அல்-ஃபதாலே.

    குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சிறிய பெரும்பான்மையுடன் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.
    ஐம்பது இடங்கள் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியினர் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரும் நாட்களில் இது பல அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமையும் என்று கருதப்படுகிறது. எனினும் அமையப் போகும் புதிய அரசுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று கூறப்படுகிறது.
    எதிர்க்கட்சிகள் வரிசையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புடைய கட்சி, தீவிர இஸ்லாம் நிலைப்பாடுள்ள ஸலாஃபி கட்சியினர் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.
    ஐம்பது இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட 300 பேரில் 14 பேர் மட்டுமே பெண்கள். இதில் ஒரு பெண் மட்டுமே வெற்றி பெற்றதாகத் தகவல் வெளியானது. ஆனால் வேறு விவரங்கள் வெளியாகவில்லை. முழுமையான ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர்.
    அமைச்சர்களுக்கு மட்டுமே அந்த நாட்டில் அதிகாரம் உள்ளது. அமைச்சர் பதவிகளில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகின்றனர். தற்போதைய பிரதமர் ஜாபேர் முபாரக் அல்-ஸபா அந்தப் பதவியில் தொடர்வார் என்று கூறப்படுகிறது. அவர் மீண்டும் பிரதமர் பதவி பெறவில்லையென்றாலும், அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த நபரே அந்தப் பதவியில் நியமிக்கப்படுவார் என்பது உறுதி.
    சென்ற சில ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பற்பல அரசியல் மாற்றங்கள் குவைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த பத்து ஆண்டுகளில் அந்நாட்டில் நடைபெறும் 7-ஆவது பொதுத் தேர்தல் இது. கடந்த தேர்தல்களை வெவ்வேறு கட்சிகள் புறக்கணித்தன.
    வளைகுடா நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறையை அறிமுகம் செய்த முதல் நாடு குவைத் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஜனநாயக முறை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.
    தற்போதைய தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பாதி இடத்தைக் கொடுத்துள்ள போதிலும், முக்கிய அதிகாரங்கள் தொடர்ந்து அல்-ஸபா அரச குடும்பத்திடம்தான் இருக்கும். குவைத்தில் கடந்த 250 ஆண்டுகளாக அந்தக் குடும்பம்தான் ஆட்சி புரிந்து வருகிறது. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 7 சதவீத அளவு குவைத்தில் உள்ளது. தினசரி 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அந்த நாடு நிலத்தடியிலிருந்து எடுத்து வருகிறது. குவைத்திடம் சுமார் 60 ஆயிரம் கோடி டாலர் (சுமார் ரூ. 40 லட்சம் கோடி) ரொக்கம் கையிருப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.
    பெட்ரோலிய வளம் நிறைந்த அந்த நாட்டில், பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விவகாரங்களிலும் ஏராளமான சலுகைகளை குடிமக்களுக்கு வழங்கி வருகிறது குவைத் அரசு. ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து, பெட்ரோலியம் பொருள்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தைக் குறைப்பதாக அரசர் அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பெட்ரோல் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் இது மிகப் பெரிய விவாதப் பொருளாகியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai