Enable Javscript for better performance
சிரியா: கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிரியா: கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    children

    சிரியாவின் அலெப்போ நகரில் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சிறுவர்கள் (கோப்புப் படம்).

    சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தப்பி வெளியேறுவதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.
    சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
    அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வெளியேறினர். அவர்கள் பாதுகாப்பாக அந்த நகரின் மஸகென் ஹனானோ பகுதிக்குள் நுழைந்தனர். சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் மஸகென் ஹனானோ முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
    தற்போது நகரின் ஹைதரியா, ஷகூர் ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ராணுவம் அங்கு இயந்திரத் துப்பாக்கி மூலம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
    ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் தரப்பில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
    அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் கடந்த நவ. 19 -ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தீவிரத் தாக்குதலில் 219 பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலான உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.
    அதே வேளையில், அரசு கட்டுப்பாட்டுப் பகுதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 27 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதில் 11 பேர் சிறுவர்கள். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
    இதனிடையே, அலெப்போ நகரில் மஸகென் ஹனானோ பகுதியை மீட்டது அரசுப் படைகளுக்கு கிடைத்த முக்கியமான வெற்றி என்று சிரியா ராணுவம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.
    கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை முற்றிலும் மீட்கும் வகையில் ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai