Enable Javscript for better performance
காப்புரிமை விதிமீறல் விவகாரம்: மேல் முறையீட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    காப்புரிமை விதிமீறல் விவகாரம்: மேல் முறையீட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 11:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apple

    ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் அனுமதியின்றிப் பயன்படுத்தியது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாகத் தீர்ப்பு வெளியாகியது.
    தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்புகளில், ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
    இதையடுத்து, சாம்சங் நிறுவனம் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது காப்புரிமை விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக சாம்சங் நிறுவனம் 220 கோடி டாலர் இழப்பீடு (சுமார் ரூ.14,500 கோடி) வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் கோரியது.
    இந்த வழக்கை விசாரித்த கலிஃபோர்னியா நீதிமன்றம் சாம்சங் நிறுவனம் 11.96 கோடி டாலர் (சுமார் ரூ.790 கோடி) இழப்பீட்டை ஆப்பிள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
    இந்த தீர்ப்பை எதிர்த்து சாம்சங் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை விதிகளை சாம்சங் நிறுவனம் மீறவில்லை என்று சென்ற பிப்ரவரி மாதம் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
    ஆப்பிள் நிறுவனம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை (அக்.7) இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.
    அப்போது, ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் பொதுப்படையானவை; அவற்றைக் காப்பீடு செய்ய இயலாது என்பதை சாம்சங் நிறுவனம் நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, சாம்சங் நிறுவனம் 11.96 கோடி டாலர் இழப்பீட்டை ஆப்பிள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று 11 நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.
    இந்த வழக்கைத் தவிர, காப்புரிமை விதிமீறல் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு, சாம்சங் நிறுவனம் 54.80 கோடி டாலர் (சுமார் ரூ.3,617 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து சாம்சங் நிறுவனம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
    அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் தொடரப்பட்ட காப்புரிமை தொடர்பான வழக்குகளைக் கைவிடுவது என கடந்த 2014-ஆம் ஆண்டு சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கூட்டாக முடிவு செய்தன.
    இதையடுத்து, 12 நாடுகளில் காப்புரிமை தொடர்பான வழக்குகளை இரு நிறுவனங்களும் திரும்பப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai