Enable Javscript for better performance
கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு- Dinamani

சுடச்சுட

    
    nobel

    நிகழாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸýக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர்ப் பதற்றச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, அந்தக் குழுவின் தலைவர் கசி குல்மேன் ஃபைவ், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
    உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா, தற்போது மேலும் சீர்குலையும் அபாயக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயன்று வரும் அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக காசி குல்மேன் ஃபைவ் தெரிவித்தார்.
    கொலம்பியாவில் அரசின் ராணுவப் படைகளுக்கும், ஃபார்க் எனப்படும் புரட்சிகர அமைப்பின் கொரில்லா படைகளுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால், இதுவரை 2.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 45,000 பேர் காணாமல் போயினர்.
    இந்நிலையில், கொலம்பியாவில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, அரசுக்கும், புரட்சிகர அமைப்பின் தலைவர் ரோட்ரிகோ லண்டனோவுக்கும் இடையே முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் 26-ஆம் தேதி கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    அதில், அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். அதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முயடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நாட்டின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியள்ளது. இந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


    "உத்வேகம் அளிக்கும்'- கொலம்பிய அதிபர்

    இதனிடையே, அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்படுவது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என்று கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
    அமைதி முயற்சிக்காக நோபல் பரிசு அறிவித்திருப்பது, கொலம்பியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கு கொண்டுவர நாங்கள் முன்னெடுத்துள்ள முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது.
    உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுரவும், கொலம்பியாவில் அமைதியைக் கட்டமைப்பதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தவும் இந்த விருது மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai