Enable Javscript for better performance
சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியாவால் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது: பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியாவால் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது: பாகிஸ்தான்

    By DIN  |   Published on : 08th October 2016 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியாவால் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது குறித்து தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா எந்நேரமும் ரத்து செய்யலாம் என்று பாகிஸ்தானில் ஒருவித அச்சம் நிலவுகிறது.
    இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜஹாரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
    சிந்து நதி பகிர்வு ஒப்பந்தத்தை, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தமாகும். எனவே அந்த ஒப்பந்தத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு நாடு மட்டும் வெளியேறுவதற்கு வழியில்லை. ஒப்பந்தத்தின் 12-ஆவது பிரிவின் 3 மற்றும் 4-ஆவது துணைப் பிரிவுகளில், அந்த ஒப்பந்தத்தை எந்த நாடும் திருத்தவோ அல்லது தன்னிச்சையாக ரத்து செய்யவோ முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒப்பந்தத்தின்படி தனக்கு இருக்கும் கடமைகளை மீறுவது தொடர்பாக இந்தியத் தலைவர்கள் பேசி வருவது குறித்து சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்கு உரிய பதிலடியை பாகிஸ்தான் அளிக்கும் என்றார் அவர்.
    அப்போது ஜஹாரியாவிடம், இந்தியாவுக்கு செல்லும் பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியில் சீனா தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்தியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "இதுதொடர்பான ஊடகச் செய்திகளைத்தான் நாங்கள் பார்த்தோம். இந்த விவரம் குறித்து தகவல்களைப் பெற, சீன அரசைத்தான் நீங்
    கள் அணுக வேண்டும்' என்றார்.
    முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் வெளியுறவு விவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் மற்றும் பிற தலைவர்களும், இந்தியாவால் அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
    அதேபோல், அந்த ஒப்பந்தத்தை இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்யும்பட்சத்தில், அதை போர் நடவடிக்கையாக கருதுவோம் என்றும் பாகிஸ்தான் மிரட்டல்
    விடுத்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai