Enable Javscript for better performance
"சிரியா தொடர்பான பிரான்ஸ் தீர்மானத்தை ரஷியா நிராகரிக்கும்'- Dinamani

சுடச்சுட

    

    "சிரியா தொடர்பான பிரான்ஸ் தீர்மானத்தை ரஷியா நிராகரிக்கும்'

    By DIN  |   Published on : 08th October 2016 11:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    veedavee

    சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக ரஷியா நிகழ்த்தி வரும் தாக்குதலைக் கண்டித்து ஐ.நா.வில் பிரான்ஸ் தீர்மானம் தாக்கல் செய்தால், தங்களுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிப்போம் என்று ரஷியா தெரிவித்தது.
    முன்னதாக, சிரியா தொடர்பாக, 15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ரகசியக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிவுற்றதும் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விடாலி சுர்கின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
    சிரியா தொடர்பாக பிரான்ஸ் அவசர அவசரமாக ஒரு தீர்மானத்தை உருவாக்கியிருக்கிறது. சிரியா விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கென்று அது உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ரஷியாவின் வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவதற்காகவே அந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ரஷியா அனுமதிக்காது என்று அவர் கூறினார்.
    சிரியாவில் போர் நிறுத்தம் குறித்த பிரான்ஸின் வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
    சிரியாவில் முக்கியத்துவம் வாய்ந்த அலெப்போ நகரை முற்றிலும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உக்கிரமான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் கடந்த கடந்த செப். 22-ஆம் தேதி தொடங்கியது.
    ரஷிய போர் விமானங்களின் உதவியுடன் நடைபெறும் கடும் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா-ரஷியா முயற்சியில் அறிவிக்கப்பட்ட முந்தைய போர் நிறுத்தம் தோல்வி அடைந்ததையடுத்து, அந்தத் தாக்குதல் தொடங்கியது. அலெப்போவுக்கான கடுமையான இறுதிக் கட்டத் தாக்குல் பல மேற்கத்திய நாடுகளின் கண்டனத்தை ஈர்த்துள்ளது. ரஷியா மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது.
    இந்நிலையில், மீண்டும் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பிரான்ஸ் முன்வைத்துள்ள வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கு வந்துள்ளது.
    உடனடியாக போர் நிறுத்தம் அறிவித்தல், சிரியா மற்றும் ரஷியாவின் போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தல், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிப் பொருள்கள் கொண்டு செல்வது உள்ளிட்ட யோசனைகள் பிரான்ஸ் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. போர் நிறுத்தத்தை இருபது நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் குழு கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஆனால், பயங்கரவாத நிலைகள் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தொடரும் என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறியது. இந்த நிலையில்தான் பிரான்ஸ் முன்வைத்த தீர்மானம் குறித்த விவாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது. ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai