Enable Javscript for better performance
பனாமா ஆவண விவகாரம்: காமன்வெல்த் நிதியமைச்சர்களுடன் ஜேட்லி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பனாமா ஆவண விவகாரம்: காமன்வெல்த் நிதியமைச்சர்களுடன் ஜேட்லி ஆலோசனை

    By DIN  |   Published on : 08th October 2016 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Arun Jaitley

    பனாமா ரகசிய ஆவணங்களில் பல்வேறு முக்கியப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ள நிலையில், அதன் விளைவாக சர்வதேச வரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்னைகள் குறித்து காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்தாலோசித்தார்.
    அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் நிதியமைச்சர்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பனாமா ஆவணங்கள் குறித்தும், சர்வதேச வரிவிதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பனாமாவைத் தலைமையிடமாகக் கொண்ட மொசாக் ஃபொன்சேகா என்ற நிறுவனமானது சர்வதேச வங்கிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் முதலீடு மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை குறித்த ஆவணங்கள் மொசாக் ஃபொன்சேகாவிடம் உள்ளன.
    இந்த ஆவணங்களில் பெரும்பகுதியை ஜெர்மன் பத்திரிகையொன்று கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புடைய நபர்களின் மின்னஞ்சல் தகவல்கள், வர்த்தகப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அவற்றை 70 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்தனர்.
    அதன் முதல்கட்ட ஆய்வு முடிவுகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்தியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளன.
    பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் மீது விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜேட்லி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், அமெரிக்கா சென்றுள்ள அவர், காமன்வெல்த் நாடுகளுடனும் அதுகுறித்து ஆலோசித்துள்ளார்.
    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காமன்வெல்த் அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியத் தரப்பில் 10,22,100 பவுண்டுகள் (சுமார் ரூ.84 கோடி) வழங்க உறுதியளித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai