Enable Javscript for better performance
பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆணவக் கொலைக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆணவக் கொலைக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pakistan

    ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கும், பாலியல் குற்றங்களை மரபணு பரிசோதனை அடிப்படையில் உறுதி செய்து தண்டனை வழங்குவதற்கும் வகை செய்யும் இரு மசோதாக்கள், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
    நாடாளுமன்ற மேலவையில் 2014-இல் தாக்கல் செய்யப்பட்ட இரு மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இரு மசோதாக்களையும், அவை உறுப்பினர் ஃபர்ஹத்துல்லா தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
    தற்போதுள்ள சட்டப்படி, குடும்ப கெüரவம் கருதி பெண் ஒருவரை அவரது குடும்ப உறுப்பினர் கொலை செய்தால், மற்றொரு குடும்ப உறுப்பினர் அவருக்கு மன்னிப்பு வழங்கலாம். அவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டால், கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விடுவார்.
    ஆனால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சமாதானப் பேச்சு நடத்துவது, நெருங்கிய உறவினரைக் கொலை செய்வதற்கு அளிக்கப்படும் உரிமை, இழப்பீடாக பணம் கொடுப்பது ஆகியவற்றுக்கு இடம் கிடையாது. இதே விதிகள், பெண்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கும் பொருந்தும் என்றார்.
    அதையடுத்து, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
    இந்தப் புதிய மசோதாவின்படி, ஆணவக் கொலை செய்த குற்றவாளியை அவரது குடும்ப உறுப்பினர்கள் மன்னித்துவிட்டாலும், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
    இதேபோல், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்யும் மசோதாவும் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    பாலியல் பலாத்கார குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் 2 சதவீதத்தினர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய சட்டப்படி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரபணு பரிசோதனை கட்டாயமில்லை. இதனால்தான், பாலியல் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடுகிறார்கள். எனவே, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்படுவோரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்வது இந்த மசோதா மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    மேலும், காவல் நிலையங்களில் நிகழும் பலாத்காரம், சிறார்களை பலாத்காரம் செய்வது, மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு தண்டனையை உறுதி செய்யும் அம்சங்களும் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai