Enable Javscript for better performance
பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 11:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிப்பிடத்தக்க பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆளாகி வருவதால், அந்த நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது:
    பிரிவினைவாதிகளின் வன்முறைத் தாக்குதல், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவை பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பணம் பறிப்பதற்காக, பயங்கரவாதிகளும், கிரிமினல் கும்பல்களும் ஆள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மிக அவசியமான காரணங்கள் இருந்தால் தவிர, அமெரிக்கக் குடிமக்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
    அரசு அதிகாரிகள், மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், காவல் துறையினர், பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்டோரைக் குறி வைத்து அங்கு தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சில பயங்கரவாத நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கத் தொடர்பு இருந்ததால்தான் அவர்கள் தாக்கப்பட்டனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏற்கெனவே பயங்கரவாத அச்சுறுத்தலால், பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தையும் அந்த அறிவுறுத்தல் குறிப்பிட்டுள்ளது. விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் உள்ள ஆபத்து குறித்து அமெரிக்க தேசிய வான்வழிப் போக்குவரத்து ஆணையம் விமானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
    ஆனால் அமெரிக்க விமானங்களும் விமானிகளும் பாகிஸ்தான் செல்லத் தடை எதையும் அந்த ஆணையம் விதிக்கவில்லை. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. இதே போன்ற எச்சரிக்கை இதற்கு முன், கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai