Enable Javscript for better performance
"மாத்யூ' சூறாவளி மழை: ஹைட்டியில் 122 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    
    flood

    ஹைட்டியில் பலத்த சூறாவளி மழையைத் தொடர்ந்து, லியோகான் நகருக்குள் பெருக்கெடுத்தோடிய ருயோன் நதி.

    ஹைட்டியை தாக்கிய "மாத்யூ' சூறாவளி மழையில் 122 பேர் பலியாகினர்.

    ஆப்பிரிக்கவையொட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய "மாத்யூ' சூறாவளி கடந்த சில நாட்களாக மேற்கு நோக்கி நகர்ந்து வட அமெரிக்கா கண்டத்தின் தென் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
    ஹைட்டியில் சூறாவளி மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 122 என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அந்நாட்டு ஊடகங்கள் பலி எண்ணிக்கையை 264 என்று குறிப்பிடுகின்றன.
    கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற பலத்த சூறாவளி இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. சூறவாளியைத் தொடர்ந்து, ஹைட்டியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
    இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது.
    ஆனால் அதே சமயத்தில் பலி எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். சூறாவளி மழை பாதிப்பு அதிகமுள்ள தென் பகுதியைச் சேர்ந்த எம்.பி. ஹேர்வ் ஃபூர்கான் இது குறித்து கூறியதாவது:
    ஹைட்டியின் தென் தீபகற்ப பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினர் எவரும் செல்ல முடியாத நிலை உள்ளது. முதல் கட்ட தகவல் அடிப்படையிலேயே 300-க்கும் அதிகமானவர்கள் சூறாவளி மழைக்கு பலியாகியிருக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
    முன்னதாக கியூபாவில் "மாத்யூ' சூறாவளி மழைக்கு 9 பேர் பலியானார்கள்.

    அமெரிக்காவில் எச்சரிக்கை நிலை

    அமெரிக்காவின் ஃபுளோரிடா, தெற்கு கரோலினா மாகாணங்களின் சுமார் 1,000 கி.மீ. நீள கடலோரப் பகுதியில் வசிக்கும் 30 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும், சில இடங்களில் 3 மீட்டர் உயர அலைகள் எழக் கூடும் என்றும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
    அதிக பாதிப்பு அச்சுறுத்தல் உள்ள ஃபுளோரிடா, ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் தேசிய நெருக்கடி நிலையை அதிபர் ஒபாமா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் பாதுகாப்புப் படையினர், தேசிய அவசர கால மீட்புப் படையினர் அந்தப் பகுதிக்குச் செல்லத் தயாராகினர்.
    ஃபுளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் கூறியதாவது: புயல், மழையால் பாதிப்படையும் வீடுகளையும் தொழிலையும் மீட்டுக் கொள்ளலாம்; ஆனால் போன உயிரை மீட்க முடியாது. இந்த சூறாவளியில் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்ற வகையில் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai