Enable Javscript for better performance
"மாத்யூ' சூறாவளி: ஹைட்டியில் 800-க்கும் மேற்பட்டோர் பலி?- Dinamani

சுடச்சுட

    
    hurricane

    ஜெரிமியில் சூறாவளித் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் குடும்பத்தினர். பின்னணியில், முற்றிலும் சேதமடைந்த மீனவக் குடியிருப்புகள்.

    ஹைட்டியில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையில் 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    அந்த நாட்டு அரசால் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக அந்நாட்டின் தென் பகுதியை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய சூறாவளி மழைக்கு 122 பேர் பலியானதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் நாட்டின் தென் பகுதியுடன் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், சூறாவளி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கு நிலவும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.
    இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டதில் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
    ஹைட்டியில் சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கியதில், 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர், மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
    நாட்டின் தென் கரையோரம் அமைந்த ஏராளமான மீனவ கிராமங்கள் பலத்த சேதமடைந்தன. அந்த பாதிப்பின் கடுமை வெளியுலகில் தாமதமாகத் தெரிய வந்தது.
    அதுவரை மீட்பு நடவடிக்கைகளில் பொதுமக்களே ஈடுபட்டு வந்தனர். தற்போது ஹைட்டி நிலவரம் தெரிய வந்ததும், அதிக பாதிப்படைந்த தென் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    அந்தப் பகுதியில் அவதியுறும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    உதவி நடவடிக்கைகளில் பயன்படுத்த இரு ராணுவ ஹெலிகாப்டர்களை அந்த இடத்துக்கு விரையுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா சனிக்கிழமை உத்தரவிட்டார். உதவிப் பொருள்களை வழங்க ஐ.நா. ஹெலிகாப்டர் ஹைட்டியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
    ஜெரிமி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கான்கிரீட் கட்டடங்களைத் தவிர பிற வீடுகளில் அமைந்த தகரக் கூரைகள் சூறாவளியில் நாசமாகின. நாட்டின் தென் தீபகற்பப் பகுதியில் மூன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடத்தைச் சென்றடையும் வழிகள் சேதமடைந்துள்ளன.
    முற்றிலும் முடங்கியிருந்த மின்சாரம், தொலைத் தொடர்பு வசதிகள் சீராகி வருகின்றன.
    வீடுகளின் மீது மரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பலர் உயிரிழந்தனர். பலத்த சூறாவளிக் காற்றில் தகரக் கூரைகள் தகர்ந்து விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர். கழிவு நீர் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதன் விளைவாக 7 பேர் காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் எலும்பு முறிவுக் காயங்களுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    அமெரிக்காவில் 4 பேர் பலி


    "மாத்யூ' சூறாவளி தாக்கியதில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 4 பேர் பலியாகினர்.
    மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றில் மரம் பெயர்ந்து விழுந்து இருவர் உயிரிழந்ததாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
    மாத்யூ சூறாவளி தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு கரையைக் கடந்தது.
    ஆப்பிரிக்கவையொட்டிய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய "மாத்யூ' சூறாவளி, கரிபீயன் பகுதியைத் தாக்கிய பின்னர் அமெரிக்க கரையை அடைந்தது.
    கடந்த சில நாட்களாக வட அமெரிக்க கண்டத்தின் தென் பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. கியூபாவில் "மாத்யூ' சூறாவளி மழைக்கு 9 பேர் பலியானார்கள். டொமினிகன் குடியரசில் "மாத்யூ' சூறாவளிக்கு நால்வர் பலியாகினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai