Enable Javscript for better performance
மன்னர் மரணம்: தாய்லாந்தில் ஓராண்டுக்கு துக்கம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னர் மரணம்: தாய்லாந்தில் ஓராண்டுக்கு துக்கம் அனுசரிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    THAI4

    மறைந்த மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக தாய்லாந்து தலைநகரிலுள்ள அரண்மனை வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். (உள்படம்) மன்னருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தாய்லாந்து பிரதமர் பிரயுத

    தாய்லாந்து மன்னர் காலமானதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
    1946-ஆம் ஆண்டு அரியணையேறிய பூமிபால அதுல்யதேஜ, 70 ஆண்டு காலம் தாய்லாந்தின் மன்னராகத் திகழ்ந்தார். உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை அவர் காலமானார். இதையடுத்து, நாடு முழுவதும் ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
    ஒரு மாத காலத்துக்கு அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. துக்கம் கடைப்பிடிப்பதில் தனியார் துறைக்குத் தனியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆடம்பரமான கேளிக்கை நிகழ்ச்சிகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
    பிரதமர் பிரயுத் சான்-ஓசா கூறியதாவது: மன்னரின் மரணம் நாட்டுக்குப் பேரிழப்பாகும். அதையொட்டி ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனினும் நாட்டில் சில பொது நடவடிக்கைகள் வழக்கம் போலத் தொடர வேண்டும். பொருளாதாரம் முடங்கிவிடக் கூடாது. நிதி நடவடிக்கைகள், பங்குச் சந்தை தொடர்ந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது நாட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்றார் அவர்.
    மன்னரின் உடல் அரண்மனை வளாகத்தில் உள்ள மரகத புத்தர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து காலஞ்சென்ற மன்னருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    மன்னரைக் கடவுளாகக் கருதும் தாய்லாந்தில் அவரது மரணச் செய்தி நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
    சக்ரி அரச வம்சத்தில் 9-ஆவது மன்னரான அவர் ஒன்பதாவது ராமா என்றும் அறியப்பட்டார். உலகில் மிக நீண்ட காலம் மன்னராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவராக அவர் திகழ்ந்தார். அவர் காலமானதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மஹா வஜ்ரஅலங்காரனுக்கு (64) முடிசூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முடிசூட்டும் நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
    அடுத்த அரசர் அரியணையேறும் வரை, முன்னாள் பிரதமர் பிரேம் தின்சுலாநந்தா (96) இடைக்கால அரசராகப் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai