பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
தேர்தலில் பிரதமர் தெரசா மே (60) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்ஃபைன் (69) தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 650 எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 4.69 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 15 லட்சம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற 326 உறுப்பினர்கள் தேவை. பிரிட்டன் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 2.30 மணி) வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பது வெள்ளிக்கிழமை காலையில் தெரிந்துவிடும்.
பிரிட்டனில் 2020-ஆம் ஆண்டில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவெடுத்துவிட்ட சூழ்நிலையில், அது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பேச்சு நடத்த வலுவான பெரும்பான்மை தேவைப்படும் காரணத்தால் தேர்தலை 3 ஆண்டுகள் முன்னதாக நடத்த பிரதமர் தெரஸா மே முடிவு செய்தார்.
தொடக்கத்தில், நடைபெற்ற கருத்து கணிப்புகளில் தெரஸா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு கூடுதல் பெரும்பான்மை கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு சற்று குறைந்து விட்டது.
பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதனால், தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரதமர் தெரஸா மே ஏற்கெனவே தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்திவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com