அரசுக்கு சாதகமாக செயல்பட வற்புறுத்தல்: டிரம்ப் மீது எஃப்.பி.ஐ. முன்னாள் தலைவர் புகார்

அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்த அறிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம்  விளக்கம் அளிக்கத் தயாராகும் எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் விளக்கம் அளிக்கத் தயாராகும் எஃப்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி.
Updated on
1 min read

அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்த அறிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து கூறியுள்ள கருத்துகள் அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி (56), டொனால்ட் டிரம்ப் அரசால் கடந்த மாதம் தீடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ. விசாரணை தொடங்கப்படும் நிலையில் அதன் இயக்குநர் நீக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், உளவு விகாரங்களுக்கான நாடாளுமன்றக் நிலைக் குழுவிடம் ஜேம்ஸ் கோமி வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
அந்த விளக்கங்களை எழுத்து வடிவில் அறிக்கையாக அவர் முன்கூட்டியே நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளித்திருந்தார்.
அந்த அறிக்கையில் விவரங்களை நாடாளுமன்ற நிலைக்குழு புதன்கிழமை வெளியிட்டது. ஜேம்ஸ் கோமியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக நாடாளுமன்ற நிலைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த அறிக்கையில், டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு குறித்து ஜேம்ஸ் கோமி விவரித்துள்ளார்.
அந்த சந்திப்பின்போது, "எனக்கு விசுவாசம்தான் தேவை.. விசுவாசத்தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்' என்று டிரம்ப் தன்னிடம் ஆணித்தரமாகக் கூறியதாக ஜேம்ஸ் கோமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின் மீதான எஃப்.பி.ஐ. விசாரணை தனது ஆட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதால், அந்த விசாரணையைக் கைவிடும்படி டொனால்ட் டிரம்ப் வற்புறுத்தியதாகவும் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகள் மோசமானது மட்டுமல்ல, சட்ட விரோதமானதும் கூட என்று ஜனநாயகக் கட்சி எம்.பி. எட் மார்க்கீ குற்றம் சாட்டியுள்ளார்.
புலாய்வு அமைப்பின் இயக்குநர் தன்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறுவது, அரசின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விசாரணைகளைக் கைவிட வலியுறுத்துவது, தனக்கு ஆதரவாகச் செயல்படாத காரணத்துக்காக எஃப்.பி.ஐ. இயக்குநரின் பதவியைப் பறித்தது போன்ற டிரம்ப்பின் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இவை சட்டத்தின் மாண்மைக் குலைக்கும் செயல்களாகும் என்று எட் மார்க்கீ தெரிவித்துள்ளார்.
விசுவாசம், ரகசியம், நெருக்கடி ஆகியவற்றின்மீது அதீத மோகம் கொண்ட அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்படுகிறார் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குடியரசுக் கட்சி எம்.பி.க்களில் பலரே இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், அவரைப் பதவி நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமை ஏற்படவில்லை என்று டிரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com