

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் புதன்கிழமை தாக்குதல் நிகழ்த்திய 5 பயங்கரவாதிகளும், ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்காக சண்டையிட்டவர்கள் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நாடாளுமன்றம் மற்றும் அந்த நாட்டின் மறைந்த மதத் தலைவர் அயதுல்லா கோமெனியின் கல்லறை ஆகிய இடங்களில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மனித வெடிகுண்டுகளைக் கொண்டும், துப்பாக்கியால் சுட்டும் 5 பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில், ஈரான் அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றத்திலும், அயதுல்லா கோமெனி கல்லறையிலும் தாக்குதல் நடத்திய 5 பேரின் அடையாளமும் தெரிந்தது. அவர்கள் அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்கள்.
இராக்கின் மொசூல் நகரிலும், சிரியாவின் ரக்கா நகரிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் கொடுஞ் செயல்களில் அவர்கள் ஐந்து பேரும் பங்கேற்றுள்ளனர்.
ஈரானின் புனிதத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக இந்த ஐந்து பேரும் கடந்த ஆண்டு நாடு திரும்பினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கண்டனம்: ஈரான் அதிர்ச்சி
டெஹ்ரான் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களே, அதற்கு இரையாகவும் ஆவார்கள் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது' என்று குறிப்பிட்டது ஈரானியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் கூறுகையில், ""டிரம்ப்பின் இந்த அறிக்கை மிகவும் கீழ்த்தரமானது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.