

மியான்மரின் தேசிய ஆலோசகராக உள்ள ஆங் சான் சூகிக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிதைத் திரும்பப் பெற வேண்டும் என்று இணையதளத்தில் எழுந்த கோரிக்கை மனுவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3.65 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தபோது ஆங் சான் சூகி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் அடையாளமாக மாறிய அவர், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், 1991-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றாலும் சட்டப்படி அவரால் அதிபர், பிரதமர் போன்ற பதவிகளை வகிக்க முடியாது என்பதால், தேசிய ஆலோசகர் என்ற புதிய பதவியுடன் ஆட்சிக்குத் தலைமை தாங்கி வருகிறார். இந்நிலையில், ரோஹிங்கயா பிரிவு மக்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையடுத்து, ஆங்சான் சூகி தலைமையின் கீழிலான ஆட்சியில் ஒரு பிரிவு மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறியதால் அவருக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைத் திரும்பப் பெற வேண்டும் நோபல் பரிசு கமிட்டிக்கு இணையவழியாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவுக்கு 3.65 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து, அந்த ஆன்லைன் மனுவில் தங்கள் பெயர்களைப் பதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.