இடைத்தேர்தலில் வெற்றி: ஆஸ்திரேலிய அரசு கவிழும் அபாயம் நீங்கியது

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மால்கம் டர்ன்புல் அரசு கவிழும் அபாயம் நீங்கியது.
இடைத்தேர்தலில் வெற்றி: ஆஸ்திரேலிய அரசு கவிழும் அபாயம் நீங்கியது

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற இடைத் தேர்தலில் முன்னாள் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மால்கம் டர்ன்புல் அரசு கவிழும் அபாயம் நீங்கியது.
இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் வெளியிட்ட தீர்ப்பையடுத்து, துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நியூ செüத் வேல்ஸ் மாகாணம், டாம்வர்த் நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். அதில் 64 சதவீத வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
நாடாளுமன்றத்தின் கீழவையில் ஆளும் கட்சிக்கு ஒரே ஒரு உறுப்பினரின் பெரும்பான்மையே இருந்து வந்த நிலையில், பார்னபி ஜாய்ஸ் விலக நேர்ந்தது. எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆளும் ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலை எழுந்தது. இந்த நிலையில், அவர் வெற்றி பெற்றிருப்பதால், பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆட்சி கவிழும் அபாயம் நீங்கியது. 
பிரிட்டனின் காலனியாக இருந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 1901-இல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அது பிரிட்டன் முடியாட்சியின் கீழ் செயல்படும் சுதந்திர நாடு. தன்னாட்சி அதிகாரம் வழங்கியபோது இயற்றிய சட்டப்படி, ஆஸ்திரேலிய குடியுரிமையுடன் பிரிட்டன் அல்லது பிற பிரிட்டன் காலனியின் குடியுரிமையும் உள்ளவர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக ஆவதை தடுக்கும் சட்டம் சாதாரண குடிமக்களுக்குப் பொருந்தாது. அந்த வகையில், ஏராளமானோர் பிரிட்டன், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையுடன் ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெற்று அந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் என்ற விவரம் வெளியானது. பார்னபி ஜாய்ஸின் தந்தை நியூஸிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். அவர் தனது நியூஸிலாந்து குடியுரிமையை கைவிடவில்லை. பார்னபி ஜாய்ஸ் ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும், அவரது தந்தை வழியாக இயற்கையாகவே நியூஸிலாந்து குடியுரிமையும் பெற்றவராக இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ், மற்றும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர் தனது நியூஸிலாந்து குடியுரிமையை முறைப்படி கைவிட்டார். பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com