பாகிஸ்தான்: ஷாஹித் அப்பாஸி இடைக்கால பிரதமர்

பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமராக ஷாஹித் காகான் அப்பாஸி பொறுப்பேற்பார் என்று ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.
பாகிஸ்தான்: ஷாஹித் அப்பாஸி இடைக்கால பிரதமர்

பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமராக ஷாஹித் காகான் அப்பாஸி பொறுப்பேற்பார் என்று ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.
நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற உறுப்பினராகும்வரை, ஷாஹித் காகான் அப்பாஸி பிரதமர் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பேற்க அப்பாஸி முழு மனதுடன் சம்மதித்தாகத் தெரிவிக்கப்பட்டது.
தொழிலதிபரான ஷாஹித் காகான் அப்பாஸி முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் புகார் மீதான விசாரணையைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி கடந்த இரு நாட்களாக பல சுற்று ஆலோசனைகள் நடத்தியது.
நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் பெயர் பிரதமர் பதவிக்கு முன்வைக்கப்பட்டபோது கட்சியினர் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ள அவர் உடனடியாகப் பிரதமர் பதவி ஏற்க முடியாது. பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரே பிரதமர் பதவி ஏற்க முடியும். எனவே நவாஸ்
ஷெரீஃபின் தொகுதி அல்லது வேறு ஏதேனும் தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானதும் அவர் பிரதமர் பொறுப்பேற்பார் என்று முடிவாகியது.
வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்கு உள்ளிட்ட முறைகேடுகளின் விவரங்கள் அடங்கிய பனாமா ஆவணங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு புலனாய்வு செய்தியாளர்களால் கசியவிடப்பட்டது. பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர், தொழிலதிபர்கள், பிரபல விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்கு இருப்பது அதன் மூலம் தெரிய வந்தது.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியிருப்புகள் இருந்தது அப்போது தெரிய வந்தது. முந்தைய ஆட்சிக் காலங்களில் முறைகேடாக ஈட்டிய பணத்தில் அந்த சொத்துகளை அவர் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழுவை நீதிமன்றம் அமைத்தது. முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், ஷெரீஃபும் குடும்பத்தினரும் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்ததாகவும் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து நவாஸ்
ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com