அமெரிக்காவில் இந்தியப் பெண், குழந்தை படுகொலை

அமெரிக்காவில் இந்தியப் பெண்ணும், அவரது 7 வயது மகனும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை
அமெரிக்காவில் இந்தியப் பெண், குழந்தை படுகொலை

அமெரிக்காவில் இந்தியப் பெண்ணும், அவரது 7 வயது மகனும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான ஹனுமந்த ராவ் நாரா, அவரது மனைவி சசிகலா (38) ஆகியோர் அமெரிக்காவில் 9 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு அனீஷ் சாய் (7) என்ற ஆண் குழந்தையும் இருந்தது. இந்தத் தம்பதியினர் நியூஜெர்சியில் உள்ள பெர்லிங்டன் நகரில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஹனுமந்த ராவ் பணிமுடிந்து வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது சசிகலாவும், அனீஷ் சாயும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹனுமந்த ராவ் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலாவும், அவரது குழந்தையும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான இனரீதியான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியப் பெண்ணும், அவரது குழந்தையும் கொலை செய்யப்பட்டது இனரீதியான தாக்குதல் இல்லை என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவில்லை என்றும் நியூஜெர்சி போலீஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் இனரீதியான வெறுப்பு காரணமாக அமெரிக்க முன்னாள் கடற்படை வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்கு முன்னதாகவே, இந்த மாதத் தொடக்கத்தில் வாஷிங்டனில் சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இத்தாக்குதலும் இனவெறி காரணமாகவே நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், இந்தியப் பெண்ணும், குழந்தையும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கண்டனம்: இந்தச் சம்பவம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வேதனை தெரிவித்தனர். மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடனடிக் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.சுப்பராமி ரெட்டி உள்ளிட்ட எம்.பி.க்கள் இது பற்றி வேதனை தெரிவித்துப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com