Enable Javscript for better performance
இணைய வைரஸ் தாக்குதல் தீவிரம்: மர்ம நபர்களுக்கு சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை- Dinamani

சுடச்சுட

  

  இணைய வைரஸ் தாக்குதல் தீவிரம்: மர்ம நபர்களுக்கு சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை

  By DIN  |   Published on : 16th May 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  map

  நூற்றைம்பதுக்கும் மேலான நாடுகளில் கணினி செயல்பாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கிய இணைய வைரûஸப் பரப்பிய மர்ம நபர்களைப் பிடிக்க உலகம் முழுவதிலும் தேடுதல் வேட்டை தொடங்கியதாக சர்வதேச காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) இணைய ஆயுதத்தை ஊடுருவித் திருடிய கும்பல் அதனைக் கொண்டு பல்வேறு நாடுகளின் வலைதளங்களைக் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஊடுருவியது. இதை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் முக்கிய அரசு வலைதளங்கள் உள்ளிட்ட ஏராளமான வலைதளங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.
  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேம்படுத்தாத மென்பொருள் மூலம் வைரஸ் பரவியதாகத் தெரிகிறது. "வான்னாகிரை' என்று அறியப்படும் அந்த இணைய வைரஸ், மின்னஞ்சல் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் ஓர் அமைப்பின் கணினியைத் தாக்கினால், பணம் அளித்து மட்டுமே அதன் வலைதளத்தை விடுவித்துக் கொள்ள முடியும்.
  வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் கணினி மையங்கள் பாதிப்புக்கு உள்ளாகியதாகத் தெரிய வந்துள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நாடுகளில் அலுவல்கள் குறைவாக இருந்ததால் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே தெரிந்தது. திங்கள்கிழமை இயல்பான அலுவல்கள் தொடங்கிய நிலையில், இணைய வைரஸ் பாதிப்பின் தாக்கம் மிகவும் கடுமையாக உணரப்படுகிறது.
  ஐரோப்பிய யூனியனின் காவல் துறைத் தலைமையகமான யூரோபோலின் தலைவர் ராபர்ட் வெயின்ரைட் இது குறித்துக் கூறியதாவது:
  வைரஸ் தாக்குதல் எவரும் எதிர்பாராதது. முன்னெப்போதும் இதுபோன்ற தாக்குதலை யாரும் கண்டதில்லை. தற்போதைய அச்சுறுத்தல் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுப் பணம் பறிக்கும் கும்பலைக் கண்டுபிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளோம் என்றார்.
  யூரோபோல், பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு சைபர் பிரிவு உள்ளிட்டோரின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, பல அமைப்புகள் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன.
  பிரான்ûஸச் சேர்ந்த ரெனோ நிறுவனத்தின் கார் தொழிற்சாலை, நாடு தழுவிய அளவிலான அதன் அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கணினிகள் இணைய வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால், புறநோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டதோடு, பல அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.
  திங்கள்கிழமை நிலைமை சற்று சீரடைந்ததாக சுகாதாரத் துறை அறிவித்தது. முதலில் 99 நாடுகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது பாதிப்பு மேலும் பரவி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இணைய வைரஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
  ஜெர்மனியின் ரயில் சேவை, ஸ்பெயினின் தொலைத் தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிகா, அமெரிக்க கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ், ஜப்பானின் நிஸ்ஸான், ஹிட்டாச்சி கடும் பாதிப்புக்கு உள்ளாகின. சீனாவில் அரசு வலைதளங்கள் உள்பட 30,000 அமைப்புகளின் வலைதளங்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின. பல்கலைக்கழகங்கள், ஏடிஎம்கள், மருத்துவமனைகள் முடங்கின.
  ரஷியாவில் ரயில் துறை மற்றும் வங்கித் துறை கணினிகள் இணைய வைரஸால் தாக்கப்பட்டபோதிலும், அவை இரண்டாம் கட்ட பாதுகாப்பைக் கடந்து முன்னேற முடியவில்லை. ஊடுருவல்காரர்கள் கேட்ட தொகையை அளித்து தங்களது வலைதளங்களைப் பலர் விடுவித்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
  பிட்காயின் என்னும் டிஜிட்டல் முறை கரன்சியை இணைய வழியாக அளித்து வைரஸ் பாதிப்பிலிருந்து பலர் விடுபட்டனர் என்று இணைய பாதுகாப்பு நிறுவனமான டிஜிட்டல் ஷேடாஸ் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நபர்கள் அல்லது அமைப்புகள் இது வரை சுமார் 32,000 டாலர் (சுமார் ரூ.20 லட்சம்) அளித்துள்ளது தெரிய வந்துள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

  தவறுக்குப் பொறுப்பேற்கிறோம்: மைக்ரோசாஃப்ட்

  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு வலைதளங்கள் உள்ளிட்ட கணினிகளில் நடைபெற்ற வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் எங்கள் மீதும் தவறு உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமை சட்ட அதிகாரியுமான பிராட் ஸ்மித் தெரிவித்தார்.
  அந்நிறுவனத்தின் தலைவரும் தலைமை சட்ட அதிகாரியுமான பிராட் ஸ்மித் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பழியில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூற விரும்புகிறேன். வாடிக்கையாளர்கள், அரசுகள் ஆகியோருடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்த விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும்.
  உலக நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இணைய பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், அரசுகள் ஆகியோரின் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
  இந்நிலையில், சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:
  மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட மென்பொருளில் இருந்த சிறு குறைபாடு மூலம் கணினிகளில் வைரஸ் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. 3 மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தை எச்சரித்தது. அந்தக் குறைபாட்டை சரி செய்து மேம்படுத்திய மென்பொருளை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டது. ஆனால் பழைய மென்பொருளைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலானவர்கள் இன்னும் மேம்படுத்திய மென்பொருளுக்கு மாறவில்லை. அதனால் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்று சி.என்.என். தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai