ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறினால் வர்த்தக உறவு துண்டிப்பு: நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் நட்பு நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறினால் வர்த்தக உறவு துண்டிப்பு: நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Published on
Updated on
2 min read


ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் நட்பு நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துவிட்டது.
அந்த நாட்டின் மீது இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளிலிலேயே, இதுதான் மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஈரான் மீது நவம்பர் மாதம் அமலுக்கு வரவிருக்கும் பொருளாதாரத் தடைகள், இதைவிட மோசமாக இருக்கும்.
இந்தத் தடைகளை மீறி, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும், அமெரிக்காவுடன் வர்த்தம் செய்ய முடியாது.
என்னைப் பொருத்தவரை உலக அமைதியே முக்கியம்; வேறு எதுவும் அல்ல என்று அந்தப் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.

Caption
Caption


ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று விமர்சித்து வந்த டிரம்ப், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், அந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், மீண்டும் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்க டாலர்களை ஈரான் பெறுவதற்கும், கார்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை அந்த நாடு ஏற்றுமதி - இறக்குமதி செய்வதற்குமான தடை செவ்வாய்க்கிழமையிலிருந்து அமலுக்கு வந்தது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த மற்ற நாடுகளின் ஒப்புதலின்றி இந்தத் தடையை டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பொருள்களின் வர்த்தகத்தை ஈரானுடன் மேற்கொள்ளும் நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்படுமா ஈரான்?

ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எதிர்த்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்தைக் கடந்து செல்லும் பெண்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எதிர்த்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்தைக் கடந்து செல்லும் பெண்


ஈரானுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்துள்ள அமெரிக்கப் பொருளாரத் தடைகளால், அந்த நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க டாலர் தடையை எதிர்நோக்கி ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமையே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
தனது அந்நியச் செலாவணிச் சட்டங்களைத் தளர்த்தி, வரியே இல்லாமல் அளவற்ற தங்கத்தையும், அந்நிய கரன்சிகளையும் இறக்குமதி செய்ய ஈரான் அனுமதித்தது.
இதன் காரணமாக, தனது பொருளாதாரத்தை அந்த நாடு 20 சதவீதம் வலிமைப்படுத்திக் கொண்டது.
எனினும், வரும் நவம்பர் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் பொருளாதாரத் தடைகள்தான் ஈரானுக்கு மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த உத்தரவு, ஈரானின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான கச்சா எண்ணெய் உள்ளிட்ட 5 முக்கியத் துறைகளின் இறக்குமதி - ஏற்றுமதியை தடை செய்கிறது.
ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத் தடையை அலட்சியம் செய்தாலும்கூட, அந்தத் தடை ஈரானின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.