வடக்கு சீனாவின் ஹார்பின் பகுதியில் உள்ள முக்கிய சாலையொன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ராட்சதப் பள்ளத்தில் அவ்வழியாகச் சென்ற கார்கள் விழுந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் பகுதியில் சுமார் 86 சதுர அடி அளவுக்கு ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது.
திடீரென உருவான பள்ளத்தால், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் செய்வதறியாது திணறினர். இதில் ஒரு கார் பள்ளத்தில் விழுந்தது. அதைத் தொடர்ந்து வந்த காரின் ஓட்டுநரும் பள்ளத்தை கவனிக்காததால், முன் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாய்ந்த பிறகு பிரேக்கை அழுத்த அது பலனில்லாமல் போனது.
3வது கார் ஓட்டுநர் சற்று முன்னதாக பிரேக்கை அழுத்த அவரது கார் சக்கரங்கள் பள்ளத்துக்குள் பாயாமல் தடுக்கப்பட்டது. பள்ளத்தில் விழுந்த கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனாவில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.