மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் 1எம்டிபி' முறைகேடு தொடர்பாக அவர் மீது புதன்கிழமை (ஆக.8) புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
1எம்டிபி' ஊழல் வழக்கில், அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீது பதிவு செய்யப்படவுள்ளன.
இதுதொடர்பாக அவரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் புதன்கிழமை (ஆக.8) விசாரணை மேற்கொள்ளும் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் (சுமார் ரூ.4,150 கோடி) பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மே மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் தோல்வியடைந்தார். இந்த நிலையில், மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நஜீப் இல்லத்தில் போலீஸார் மே மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆடம்பரக் கைப்பைகளில், பணம், விலையுயர்ந்த ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதன் தொடர்ச்சியாக, தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நஜீப் ரஸாக்கை கடந்த மாதம் கைது செய்தது.