டிரம்ப் மீது விமர்சனம் எதிரொலி: சிஐஏ முன்னாள் இயக்குநர் பிரெனனின் சிறப்பு அதிகாரம் பறிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்து வரும் அந்த நாட்டு உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் இயக்குனர் ஜான் பிரெனனிடமிருந்து
டிரம்ப் மீது விமர்சனம் எதிரொலி: சிஐஏ முன்னாள் இயக்குநர் பிரெனனின் சிறப்பு அதிகாரம் பறிப்பு
Published on
Updated on
1 min read


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்து வரும் அந்த நாட்டு உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் இயக்குனர் ஜான் பிரெனனிடமிருந்து, ரகசிய ஆவணங்களைப் பார்வையிடுவதற்கான சிறப்பு அதிகாரத்தைப் பறித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் மூலம் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிபிஐ முன்னாள் இயக்குநர் ஜான் பிரெனன், அண்மைக் காலமாக இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும் அமெரிக்க அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கருத்துகளைக் கூறி வருகிறார்.
அவர் தொடர்ச்சியாகக் கூறி வரும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கெனவே பாதுகாப்பு உயர் பதவிகளில் இருந்தவர்கள், தங்களுக்கு அடுத்ததாக அந்தப் பொறுப்புகளை ஏற்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு வசதியாக, ரகசிய ஆவணங்களைப் பார்வையிடும் சிறப்பு அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கான கெளரவமாகவும் அந்த அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
எனினும், இந்த இரண்டு காரணங்களுக்காகவும் ரகசிய ஆவணங்களைப் பார்வையிடும் அதிகாரத்தை ஜான் பிரெனனுக்கு வழங்க முடியாது.
தற்போதைய உயரதிகாரிகள் எவரும் ஜான் பிரெனின் அலோசனையைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் அவரது செயல்பாடுகள் சரியாக அமைந்திருக்கவில்லை.
கடந்த 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றக் குழுவிடம் அவர் தெரிவித்த சில கருத்துகள் பொய்யானவை என்று பிற அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எனவே, உயர் பதவியில் சிறந்த சேவையாற்றியவர் என்பதன் அடிப்படையிலும் ரகசிய ஆவணங்களைப் பார்வையிடும் உரிமையை பிரெனனுக்கு அளிக்க முடியாது.
எனவே, அவரது அந்த சிறப்பு அதிகாரம் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது சிஐஏ இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜான் பிரெனன், கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, டிரம்ப் ஆட்சியில் அடுத்த இயக்குநராக மைக்கேல் பம்பேயோ நியமிக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.
அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் பிரெனன், கருப்பினத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் உதவியாளர் ஒருவரை நாய்' என்று டிரம்ப் குறிப்பிட்டது குறித்து மிகக் காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, பிரெனனின் சிறப்பு அதிகாரத்தை டிரம்ப் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.